கோலாலம்பூர், 06 ஜூலை (பெர்னாமா) -- அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ண ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் பொருட்டு, நாட்டின் தேசிய ஆண்கள் ஹாக்கி அணி அனைத்துலக அளவில் 30 க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கிறது.
இவ்வாண்டு நவம்பரில் ஈப்போவில் நடைபெறவிருக்கும் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ணம் மற்றும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற உள்ள 2022 தேசிய வெற்றியாளர் ஹாக்கி போட்டியும் இதில் அடங்கும்.
இரண்டு முக்கிய போட்டிகள் தவிர, அடுத்த டிசம்பரில் ஸ்பெயினுக்கு நட்புரீதியான ஆட்டங்களில் பங்குகொள்ள தமது விளையாட்டாளர்களுக்கு அழைப்பு வந்துள்ளதாக தேசியத் தலைமை பயிற்சியாளர், ஏ. அருள் செல்வராஜ் கூறினார்.
உகத் தரவரிசையில் முதன்மை இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகியவற்றுடன் களம் காணவும் தாங்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், விளையாட்டாளர்களை மாற்றும் திட்டம் எதுவும் தமக்கு இல்லை என்றும் மேலும் எதிர்காலத்தில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் போட்டியில், இதே ஆட்டக்காரர்களையே தாம் பயன்படுத்தவிருப்பதாகவும் அருள் செல்வராஜ் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2022 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை