ஓ.பி.ஆர் வட்டி விகித அதிகரிப்பு; மக்களுக்கு சுமையா?

12/09/2022 08:25 PM

கோலாலம்பூர், 12 செப்டம்பர் (பெர்னாமா) -- மே, ஜூலை, செப்டம்பர் என்று ஒரே ஆண்டில் மூன்று முறை ஓ.பி.ஆர் எனப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை, 0.75 விழுக்காடாக உயர்த்தப் பட்டிருக்கும் வட்டி விகிதம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்பெறச் செய்யும் நோக்கத்திற்காகவே என்று பேங்க் நெகாரா மலேசியா, பி.என்.எம் கூறுகிறது. 

ஆனால், வீடு, வாகனங்களுக்காக வங்கிளில் கடன் பெற்றிருக்கும் மக்கள் எதிர்நோக்கும் சுமை என்ன? இதன் நன்மை தீமை யாவை? 

அது குறித்த சில விளக்கங்களை வழங்குகிறார் வரிக் கணக்காளர் ரெங்கநாதன் கண்ணன்.

2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்பதாக 3.25 விழுக்காடாகவே இந்த ஓ.பி.ஆர் விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  

எனினும், பெருந்தொற்றால் மக்கள் எதிர்நோக்கிய பல பொருளாதார நெருக்கடிகளைத் கருத்தில் கொண்டு 2020-ஆம் ஆண்டு ஜூலையில் 1.75 விழுக்காடாக குறைக்கப்பட்ட 2022-ஆம் மார்ச் மாதம் வரை அவ்விகிதம் நிலைநிறுத்தப்பட்டது. 

உலகளாவிய ரீதியில் பொருளாதார மீட்சிக்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த ஓ.பி.ஆர் விகித அதிகரிப்பும் அதில் ஒன்று என்று ரெங்கநாதன் கண்ணன் விவரித்தார். 

''2019-ஆம் ஆண்டுக்கு முன்பதாக வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு இது ஒரு மீட்சிப் பெறும் நிலையிலேயே உள்ளது. ஆனால், அதன் பின்னர் கடன் பெற்றவர்கள் தொடக்கத்தில் 1.75 விழுக்காட்டு ஒ.பி.ஆர்-ஐ செலுத்திய நிலையில் தற்போது அவர்களுக்கு அது சுமையாகத்தான் இருக்கும்,'' என்று அவர் தெளிவுபடுத்தினார்.  

மேலும் தற்போது உலகளவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கத்தால் பொருட்களின் விலையும் அதிகளவு உயர்வுக் கண்டிருந்தாலும் செலவுகளைக் குறைத்து பணப்புழக்கத்தைச் சிறந்த முறையில் நிர்வகிப்பது கடனைச் சிறந்த முறையில் திரும்பச் செலுத்துவற்கான வழிகளில் ஒன்று என்று ரெங்கநாதன் கூறினார். 

அதுமட்டுமின்றி, இதனைச் சமாளிக்க வங்கிகளிடமும் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம் என்று அவர் ஆலோசனைக் கூறினார். 

''புதியத் தொகையைச் செலுத்த இயலாதவர்கள் பழைய தொகையையே செலுத்த விரும்பும் பட்சத்தில் தகுந்த ஆவணங்கள், ஆதாரங்களுடன் வங்கிகளிடம் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம். ஓராண்டு அல்லது ஈராண்டுகளுக்கு இதே தொகையைச் செலுத்த அவர்கள் கோரிக்கையை முன்வைக்கலாம்,'' என்றார் அவர்.

ஓ.பி.ஆர் விகிதம் இன்னும் அதிகரிக்கப்படலாம் என்ற கூடுதல் தகவலையும் ரெங்கநாதன் பகிர்ந்து கொண்டார்.

இருப்பினும், வங்கிகளில் சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு இந்த ஓ.பி.ஆர் விகித உயர்வு கூடுதல் வட்டியை வழங்குவதால் அது அவர்களுக்கு நன்மையையே அளிப்பதாக அவர் குறிப்பிட்டார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]