அரசியல்

பிரதமருடன் தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை - அஹ்மாட் சாயிட்

17/09/2022 07:52 PM

கோலாலம்பூர், 17 செப்டம்பர் (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரியுடன் தமக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாயிட் ஹமிடி தெரிவித்திருக்கின்றார்.

இருவருமே கட்சியில் ஒற்றுமையாக இருப்பதாகவும், 15 பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இணைந்து பணியாற்றவிருப்பதாகவும் அம்னோ தலைவருமான சாயிட் ஹமிடி குறிப்பிட்டார்.

"எங்கள் இருவருக்கிடையிலான உரையாடல்கள் மற்றும் உடல் மொழிகளை அனைவருமே கண்காணிக்கின்றனர். எங்களுக்குள் பிரச்சனைகள் இல்லை. இவ்வருடமே பொதுத் தேர்தலை நடத்தினால் போதும்," என்று அவர் கூறினார்.

சனிக்கிழமை, கோலாலம்பூரில் தேசிய முன்னணி இளைஞர் கேந்திரத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றும்போது முன்னாள் துணைப் பிரதமருமான சாயிட் ஹமிடி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய முன்னணியின் சுமார் 10,000 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

சாயிட் ஹமிடி மற்றும் இஸ்மாயில் சப்ரி உரையாற்றும் போது ''நாடாளுமன்றத்தை களையுங்கள்'' என்று முழக்கமிடப்பட்டது.

சாயிட் ஹமிடியை ஆதரிக்கும் ஒரு தரப்பினரும், இஸ்மாயில் சப்ரியை ஆதரிக்கும் ஒரு தரப்பினருமாக அம்னோவில் பிளவு பட்டிருப்பதாக முன்னதாக கூறப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)