சிறப்புச் செய்தி

விவசாயம், கால்நடை வளர்ப்புத் துறையில் நான்காம் தொழிற்துறை புரட்சி

19/09/2022 09:24 PM

கோலாலம்பூர், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- IR 4.0 எனப்படும் நான்காம் தொழிற்துறை புரட்சி, நாட்டின் அபரிமிதமான வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி வருகிறது. 

கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் இதன் பங்களிப்பு அதிகமாகவே இருந்து வரும் நிலையில், விவசாயம் உட்பட கால்நடை வளர்ப்புத் துறையிலும் இதன் பயன்பாட்டை துரிதப்படுத்தி வருகிறது, மலேசிய நம்மவர்கள் கூட்டுறவு நிறுவனம். 

அவ்வகையில், பல்வேறான தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்தும் அந்நிறுவனம், இதர பல நிறுவனங்களுடன் இணைந்து அத்துறைகளை மேம்படுத்தவிருப்பதாக, அதன் தோற்றுநர் டத்தோ வைரன் டி. ராஜ் தெரிவித்தார். 

அவற்றில் ஒன்றாக, IR 4.0-வின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அதிகம் விரிவுபடுத்தி வரும் மலேசிய தேசிய கூட்டுறவுக் கழக நிறுவனம், அங்காசாவும் தங்களுடன் கைக்கோர்த்திருப்பதாக டத்தோ வைரன் ராஜ் கூறினார். 

தற்போது எதிர்கொள்ளப்படும் வேலையாட்கள் பற்றாக்குறைப் பிரச்சனைக்கு உதவுவது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கும் ஓர் அமைப்பாக இந்த அங்காசா செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்களைச் சந்தைப்படுத்தும் நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்கு அக்கூட்டுறவு படை தங்களுடன் இணைந்திருப்பதாக டத்தோ வைரன் குறிப்பிட்டார். 

அதுமட்டுமின்றி, ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமான சேவையைப் பயன்படுத்தி விவசாயத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கும் நம்மவர்கள் கூட்டுறவு நிறுவனம் முயற்சியை முன்னெடுத்துள்ளது. 

''புதிய நவீன முறையில் விவசாயம் செய்வது, 4.0 அனுகுமுறைகளை கையாள்வது மிகவும் முக்கியமானது. விவசாயத்தில் அதனை எப்படி பயன்படுத்துவது, கற்றுக்கொடுப்பது, அந்த வாய்ப்புகளை இதர கூட்டிறவு நிறுவனங்களோடு பங்குகொள்வது குறித்தும் ஆலோசித்துள்ளோம். அங்காசாவோடு இணைந்து உதவவும் முன்வந்துள்ளோம் என'', வைரன் தி.ராஜ் குறிப்பிட்டார். 

அதேவேளையில், தற்போது வேலையில்லாப் பிரச்சனை மிகப் பெரிய சவாலாக இருந்து வருவதால், விவசாயத்தில் இதுபோன்ற நவீன முயற்சிகள் பல வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருவதாக வைரன் விவரித்தார். 

''விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு புதுமையான வழியில் வழிகாட்ட வேண்டும். பழயமுறை கவனத்தை ஈர்க்காது. ஆதலால் இன்றைய தலைமுறை இளைஞர்களை விவசாயத்தில் கொண்டு வருவதற்கு நாங்கள் இன்னும் பல திட்டங்களை கொண்டு வருகின்றோம் என வைரன்'', கூறினார். 

அதுமட்டுமின்றி, K2K எனப்படும் கூட்டுறவுகளுக்கு இடையிலான தொடர்பு அணுகுமுறை தங்கள் தரப்பு அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இதன்வழி, நவீன தொழிற்நுட்பங்களைக் கொண்டிருக்காத அல்லது அவற்றின் பயன்பாட்டை அறிந்திருக்காத கூட்டுறவுகளுக்கு, விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் அத்தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு முன்னேறலாம் என்பதை விவரிக்க முடியும் என்றும் வைரன் தெளிவுப்படுத்தினார். 

 

-- பெர்னாமா