உலகம்

உறவு வலுப்படும்; அமெரிக்காவும் பிலிப்பைன்சும் உறுதி

23/09/2022 07:32 PM

நியூயார்க், 23 செப்டம்பர் (பெர்னாமா) -- தென் சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் ரோமுவல்டெஸ் மார்கோசும் (FERDINAND ROMUALDEZ MARCOS) கலந்துரையாடி இருக்கின்றனர்.

சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தால் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று, அவ்விரு தலைவர்களும் கருதுகின்றனர்.

ஐ.நா. பொதுப் பேரவையில் கலந்து கொள்ள நியூயார்க் வந்திருக்கும்  ஃபெர்டினாண்ட் மார்கோசை ஜோ பைடன் சந்தித்தார்.

இச்சந்திப்பில் கொவிட்-19, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் எல்லை பாதுகாப்பு குறித்தும் பேசப்பட்டன.

"அமைதியைப் பேணுவதில் அமெரிக்காவின் பங்கை எங்கள் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பாராட்டுகின்றன. குறிப்பாக பிலிப்பைன்சும் பாராட்டுகிறது," என்று அவர் மார்கோஸ் கூறினார்.

சீனாவின் தாக்குதலில் இருந்து தைவானை இராணுவ ரீதியாகப் பாதுகாக்க புவியியல் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவுக்கு முக்கிய நாடாக உள்ளது.

அதனால், பிலிப்பைன்சுடன் அமெரிக்கா நட்பு பாராட்டி வருகிறது.

இதனிடையே, உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் இராணுவ தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிலிப்பைன்ஸ் நிலைப்பாட்டை ஜோ பைடன் வரவேற்றார்.

நீண்ட காலமாக பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த ஃபெர்டினாண்ட் மார்கோசிசின் மகனான ரோமுவல்டெஸ் மார்கோஸ் ஜூன் மாதம் அந்நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)