உலகம்

ஈரானில் போராட்டத்தில் பங்கேற்ற 35 பேர் உயிரிழந்தனர்

24/09/2022 08:14 PM

தெஹ்ரான், 24 செப்டம்பர் (பெர்னாமா) -- போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர்.

ஹிஜாப் அணியாததற்காகவும் பொருந்தாத ஆடைகளை அணிந்ததற்காகவும் கடந்த வாரம் ஈரானின் அறநெறி போலீசாரால் கைது செய்யப்பட்ட 22 வயதான மாஹ்சா அமினி எனும் இளம் பெண், தடுப்பு காவலில் மரணமடைந்த சம்பவம் ஈரான் மக்களிடையே கோபத்தைத் தூண்டியது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மிக பெரிய போராட்டத்தை சந்தித்திருக்கும் ஈரானில், மக்கள் பெண்களுக்கு சுதந்திரம் எனும் பதாதைகளை ஏந்தி வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்திய காணொளிகள் பரவலாகப் பகிரப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சில பெண்கள் தங்களின் ஹிஜாப்களை கழட்டி தெருவில் எரித்தது மட்டுமின்றி, ஈரானில் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக தங்களின் முடியையும் வெட்டிக் கொண்டனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடுகளை நிறுத்துமாறு ஈரானிய அரசை வலியுறுத்தி உலகெங்கிலும் உள்ள 40 நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற போராட்டங்களும் நடைபெற்றன.

தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள் தணியும் வரையில் ஈரானில் இணையச் சேவையும் நிறுத்தப்படும் என்று அமலாக்கத் தரப்பினர் கூறினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)