அரசியல்

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கின் சட்டமன்றங்கள் கலைக்கப்படாது

05/10/2022 09:15 PM

கோலாலம்பூர், 5 அக்டோபர் (பெர்னாமா) -- தனது ஆட்சியின் கீழ் இருக்கும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டமன்றங்கள் கலைக்கப்படாது என்று நம்பிக்கை கூட்டணி அறிவித்திருக்கிறது.

இன்று நடைபெற்ற தலைவர் மன்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராயிம் தெரிவித்தார்.

மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளப் பிரச்சனைக்கே, அம்மூன்று மாநிலங்களின் சட்டமன்றங்கள் முக்கியத்துவம் வழங்கும் என்றும் அவர் கூறினார். 

"வெள்ளம் ஏற்படும் காலத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முக்கியத்துவம் அளிக்கப்படும். 

"ஆகவே, அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கும் வெள்ளப் பிரச்சனைகளை களையும் வரை அவை (மூன்று சட்டமன்றங்கள்) பொதுத் தேர்தலை நடத்தாது," என்று அன்வார் கூறினார்.

வரவு செலவு திட்டம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கூட்டணி மேற்கொண்ட கூட்டத்திற்கு அன்வார் தலைமை தாங்கினார்.

வெள்ளம் ஏற்படும் போது தேர்தல் நடத்தினால் சம்பந்தப்பட்ட அம்மூன்று மாநிலங்களும் மத்திய அரசாங்கத்துடன் பொதுத் தேர்தலை நடத்த ஒத்துழைப்பு மேற்கொள்ளாது என்று கெஅடிலான் கட்சித் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)