பொது

அந்நியத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான நேர்முகத் தேர்வு மாநிலங்களிலும் நடத்தலாம்

05/10/2022 10:08 PM

புத்ராஜெயா, 5 அக்டோபர் (பெர்னாமா) -- மனிதவள அமைச்சின் அந்நியத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான நேர்முகத் தேர்வு, புத்ராஜெயா மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொழிலாளர் துறையில் நடத்தப்படலாம்.

புத்ராஜெயாவில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் நெரிசலைத் தவிர்ப்பதற்கு அந்த செயல்முறை நிலைநிறுத்தப்படுவதாக மனிதவள அமைச்சர், டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களை பணியமர்த்துவது தொடர்பில் இன்று புத்ராஜெயாவில் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர், லிம் குவான் எங் மற்றும் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ ங்கே கூ ஹாம் ஆகிய இருவருக்குமான சிறப்பு விளக்கக் கூட்டத்திற்குத் தலைமையேற்றப் பின்னர், அவர் அந்த தகவல்களைக் கூறினார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தப்படவிருக்கும் நேர்முகத் தேர்வு குறித்து அந்த சந்திப்பில் பரிந்துரைக்கப்பட்டது.

சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த அந்த விளக்கக் கூட்டத்தில், நேரத்தை மிச்சப்படுத்துவதோடு செலவுகளைக் குறைக்கும் நோக்கத்திற்காக நேர்முகத் தேர்வை இணையம் வாயிலாக நடத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இருப்பினும், முதலாளிகள் போலியான ஆவணங்களை சமர்ப்பிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், நேரடியாக நேர்முகத் தேர்வை நடத்த வேண்டும் என்றும் சரவணன் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)