சிறப்புச் செய்தி

பண்டிகைக் காலங்களில் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இணைய வர்த்தகம்

18/10/2022 08:57 PM

கோலாலம்பூர், 18 அக்டோபர் (பெர்னாமா) -- பண்டிகைக் காலங்கள், மகிழ்ச்சியை, நல்லிணக்கத்தை, குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் திருநாளாக இருப்பது மட்டுமல்லாமல், அதிகமானவர்களுக்கு வருமானத்தை இரட்டிப்பாக்கும் முக்கிய காலக்கட்டமாகவும் அமைகிறது.

அதிலும், கொவிட்-19 பெருந்தொற்று காலக்கட்டத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு, தீபாவளி பொருட்கள், வீடு வந்தடைய மிக முக்கிய காரணமாக இருந்த இணைய வர்த்தகம், அத்துறையில் ஈடுபட்டோருக்கு பொருளாதார ரீதியாகவும் மிகப்பெரிய ஊக்குவிப்பாக இருந்தது.

இவ்வாண்டு தீபாவளி சந்தைகள் வழக்கம்போல் செயல்படும் நிலையில், இந்த இணைய வர்த்தகத்திற்கு மக்களிடையே இன்னும் வரவேற்பு இருக்கிறதா என்பது குறித்த பெர்னாமாவின் கண்ணோட்டத்தை, தொடர்ந்து காண்போம்.

கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம், பணவீக்கம், பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவை மக்களின் நிதிச் சுமையை அதிகரித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஏதாவது ஒரு வகையில் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இணைய வர்த்தகம் பெருநாட்காலங்களில் தங்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுத் தருவதாக கூறுகின்றனர் இத்துறையில் ஈடுபட்டு வரும் சிலர்.

அதிலும், மாற்றுத்திறனாளியான தமக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்த இந்த இணைய வர்த்தகம், தற்போது தமது பெற்றோர்களின் நிதி சுமையைக் குறைக்கவும் உதவுவதாக கூறுகின்றார் கடந்த மூன்று ஆண்டுகளாக இத்துறையில் ஈடுபட்டு வரும் தனலெட்சுமி முனியாண்டி.

அதுமட்டுமின்றி, தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

''என்னுடவன் ஒருவர் இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே என்னால் கல்வியைத் தொடர முடியாமல் போனது. என் அம்மா மட்டும்தான் வேலை செய்கிறார். எனவே, அம்மாவுக்கும் உதவ வேண்டும், நானும் சுய காலில் நிற்க வேண்டும் என்பதற்காக நான் இந்த இணைய வர்த்தகத்தை தொடங்கினேன். இந்த தீபாவளிக்கு எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால், எனது வருமானமும் அதிகரித்துள்ளது,'' என்றார் அவர்.

தனலெட்சுமியால் நடக்க முடியாமல் போனதால், அவருக்கு உதவியாக அவரின் தந்தை வீட்டிலிருந்து அவரை கவனித்துக் கொள்ளும் வேளையில், தாம் முழுநேரமாக வேலை செய்துக் கொண்டும், பகுதிநேரமாக தனலெட்சுமி உதவுதாகவும் கூறுகின்றார் அவரின் தாயார் கஸ்தூரி முனுசாமி.

''வாடிக்கையாளரிடமிருந்து முன்பதிவை தனலெட்சுமி பெற்று விடுவார். அதற்கான பொருட்களையும் அவர் தயார் செய்து விடுவார். நானும் என் கணவரும் அந்த பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க உதவுவோம்,'' என்று அவர் கூறினார்.

கொவிட்-19 காலக்கட்டத்தில், தமது வர்த்தகம் சரிவைக் கண்டாலும், தற்போது மக்களின் ஆதரவு அதிகரித்திருப்பது குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தீபாவளி காலக்கட்டத்தில், மக்கள் அதிகம் தேடி வாங்கும் பொருட்களான துணிமணிகள், பலகாரங்கள் ஆகியவை வீடு தேடி வருவதால், இணைய வர்த்தகத்திற்கு தொடர்ந்து ஆதரவு கிடைப்பதாக கூறுகின்றனர் இணையம் வழியாக இப்பொருட்களை விற்பவர்கள் சிலர்.

''நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலக்கட்டத்தில் இந்த இணைய வர்த்தகத்தை தொடங்கும்போது சற்று சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், பெரிதளவில் ஆதரவு கிடைத்தது. ஆரம்பித்த காலம் முதல் இதுவரை எனது வருமானம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர, குறையவில்லை. நாம் தரமான பொருட்களை வழங்கும் வரை மக்களின் ஆதரவு எப்போதும் இருக்கும்,'' என்று இணையம் வழி முறுக்கு வியாபாரம் செய்யும் விக்னேஷ்வரி ராமசாமி கூறினார்.

''கொவிட்-19 காலக்கட்டத்தில் சற்று கடினமாக இருந்தாலும், வியாபாரத்தில் சுணக்கம் ஏற்படவில்லை. கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு வியாபாரத்திற்கு மேலும் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது,'' என்று இணையம் வழி பலகார வியாபரம் செய்யும் விசாந்தனி கிருஷ்ணன் தெரிவித்தார்.

''மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கொவிட்-19 காலக்கட்டத்தில் கூடுதல் வருமானத்திற்காக இந்த இணைய வர்த்தகத்தை தொடங்கினேன். நான் பகுதிநேரமாக இந்த வேலையை செய்து வந்தாலும் நல்ல வருமானத்தை ஈட்ட முடிகிறது,'' என்று இணையம் வழி துணிமணிகள் வியாபாரம் செய்யும் ஹர்ஷினி தேவி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இதனிடையே, வேலைப்பழுக்கு மத்தியில் தீபாவளி தயார்நிலை பணிகளில் ஈடுபட்டு வரும் பலருக்கு இணைய வர்த்தகம் உதவியாக இருந்தாலும், தற்போது தீபாவளி சந்தைகள் மீண்டும் கலைகட்டத் தொடங்கி விட்டதால், மக்கள் நேரடியாக கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதை விரும்புவதும் இக்கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.

''நேரடியாக பொருட்களை வாங்குவதையே நான் விரும்புகிறேன். பொருட்களின் தரத்தைப் பார்த்து வாங்குவதோடு மட்டுமின்றி பேரம் பேசி மலிவான விலையிலும் வாங்க முடிகிறது,'' என்று வாடிக்கையாளரான ஷாமளா தெரிவித்தார்.

''நான் நேரடியாக பொருட்களை வாங்க விரும்புகிறேன். அப்போதுதான் தரத்தைப் பார்த்து கழிவு விலையில் பொருட்களை வாங்க முடியும்,'' என்று மற்றொரு வாடிக்கையாளரான அர்ச்சனா ஜீவா கூறினார்.

நேரடியாகவோ இணையம் வழியோ, எப்படி பொருட்களை வாங்கினாலும், தீபாவளிக்கு வாங்கும் ஒவ்வொரு பொருளும் தரமாகவும் நியாயமான விலையிலும் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)