சிறப்புச் செய்தி

சமய நெறியோடும் கலாச்சார பண்பாடுகளோடும்  தீபாவளியைக் கொண்டாடுவோம்

22/10/2022 08:40 PM

கோலாலம்பூர், 22 அக்டோபர் (பெர்னாமா) -- அறியாமை எனும் இருள் நீங்கி மெய்யறிவு எனும் இறையொளி பெறுவதற்காக தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. 

மனிதரின் மனதில் இருளாய் குடிக்கொண்டிருக்கும் பொறாமை, ஆணவம், கோபம் போன்ற தீயக் குணங்களை ஒழித்து, அன்பு, கருணை, ஒற்றுமை, பிறர் மனதை புண்படுத்தாமை, விட்டுக் கொடுத்தல் ஆகிய நல்ல குணங்களை சுடர்விடச் செய்யும் திருநாளாகவும் இந்நாள் கருதப்படுகிறது.

தொன்று தொட்டு கொண்டாடப்படும் இந்த நன்னாளை சமயநெறி மாறாமலும் கலாச்சாரக் கூறுகள் அழியாமலும் கொண்டாடப்பட வேண்டும் என்கிறார் மலேசிய சைவ நற்பணிக் கழகத் தலைவர் தர்மலிங்கம் நடராசன்.

இந்தியர்களின் பண்டிகைகள் எப்போதும் பாரம்பரியமும் கலாச்சாரமும் நிறைந்தவையாகும்.

காலங்கள் மாற, தொழில்நுட்பமும் புதிய தலைமுறையும் வளர அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவது மறுப்பதற்கில்லை.

அந்த மாற்றத்தில் தலைமுறை தலைமுறையாய் பின்பற்றி பாதுகாக்கப்பட வேண்டிய தீபாவளி பண்டிகையின் கலாச்சாரக் கூறுகளும் சமயநெறிகளும் அழிந்து விடக்கூடாது என்கிறார் தர்மலிங்கம்.

''இந்தத் தீபாவளிக்கு முதல் நாளாக நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்த நல்ல பழக்க வழக்கங்களையும் அறநெறிகளையும் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தீபாவளிக்கு முதல்நாள் முன்னோர்களுக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. அது காலப் போக்கில் படையல் போடுதலாக உருமாறிவிட்டது. படையல் போடுதலை நம் மனநிறைவுக்கு செய்தாலும் கூட அடிப்படையாக சிந்திக்க வேண்டியது என்னவென்றால், நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றவற்றை தொடர்ந்து நாம் பின்பற்ற வேண்டும் என்பதற்காகக்தான்,'' என்று அவர் கூறினார்

அதைத் தொடர்ந்து, அக இருள் அகலவும் தீய பழக்க வழக்கங்களைத் தவிர்க்கவும் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கத்தில் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

''இந்த தீய எண்ணங்களுக்கு அடையாளமாக எண்ணெய் வைத்து, இறைவன் திருவருளுக்கு அடையாளமாக கங்காஸ்தானம் என்று சொல்லக் கூடிய கங்கையின் புனித நீரைக் கொண்டு கழுவி புறத்திலும் அகத்திலும் தூய்மை உடையவர்களாக மாற வேண்டும் என்று விவரிக்க எண்ணெய் நீராடல் நடைபெறுகின்றது,'' என்றார் அவர்.

தீய பழக்க வழக்கங்கள் நீங்கி புதிய மனிதராய் புத்துணர்ச்சி பெற்று நல்ல குணங்களை இனி தொடரப் போகின்றோம் என்பதன் அடையாளமாக தீபத் திருநாளில் புத்தாடை உடுத்தி இறைவழிபாடு செய்யப்படுகிறது.

அதில், சில பாரம்பரியங்கள் பின்பற்றப்படுவதை அவர் இவ்வாறு விளக்கினார்.

இந்நாளில் மகிழ்ச்சியை முன்னிறுத்தி ஆடம்பரத்தைத் தவிர்த்து இத்திருநாளை சிக்கனமாகவும் மிதமாகவும் குதூகலமாக கொண்டாடுமாறும் அவர் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)