பொது

இன்று மலேசிய கிண்ண இறுதியாட்டம்; அரங்கிற்குள் அரசியல் கொடிகளுக்கு அனுமதியில்லை

25/11/2022 06:32 PM

கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் இன்றிரவு நடைபெற விருக்கும் 2022 மலேசிய கிண்ண காற்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்தின்போது எந்த ஓர் அரசியல் கட்சிக் கொடியையும் ரசிகர்கள் உடன் கொண்டுவர அனுமதிக்கப்படவில்லை.

இந்த இறுதி ஆட்டத்தில், ஜோகூர் டாருல் தசிம்மும் சிலாங்கூர் எப்சியும் சந்திக்க விருக்கின்றன.

அரசியல் கட்சிக் கொடிகளை உடன் கொண்டுவரும் ரசிகர்ளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மலேசிய காற்பந்து சங்கத்தின் பாதுகாப்புக் குழுத் துணைத் தலைவர் டாலி வாஹிட் எச்சரிகை விடுத்திருக்கிறார்.

அரசியல் தொடர்பான விவகாரங்களைக் கொண்டாடவோ அல்லது எதிர்ப்புத் தெரிவிக்கவோ காற்பந்து அரங்கம் சரியான இடமல்ல என்றும் அவர் கூறினார்.

நாட்டின் நடப்பு சூழ்நிலையில், யாரும் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அரசியல் தொடர்பிலான கொடிகள் வேறுமாதிரியான உணர்வௌ ஏற்படுத்தக் கூடும் என்றும் டாலி வாஹிட் விளக்கமளித்தார்.

ஆதலால், பிரச்னைகளை காற்பந்து அரங்கத்தினுள் கொண்டுவர வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், அத்தகைய செயல் தூண்டுதலை ஏற்படுத்திவிடும் என்பதுடன் பொது ஒழுங்கையும் பாதிக்கச் செய்துவிடும் என்றார்.

இதனிடையே, இன்றைய இறுதி ஆட்டத்தைக் காண சுமார் 80 ஆயிரம் காற்பந்து ரசிகர்கள் புக்கிட் ஜாலில் அரசங்கத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக செராஸ் மானட்ட போலீஸ் தலைவர் ஸாம் ஹமில் ஜமாலுடின் கூறினார்.

மாலை ஐந்து மணிக்கு, அரங்கத்தினுள் செல்வதற்கான கதவுகள் திறக்கப்படும் என்றும் பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

அரங்கத்தினுள் கொண்டுவரப்படும் அனைத்து கைப்பைகளும் இதர உடமைகளும் சோதிக்கப்படும் என்று கூறிய அவர், உடல்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)