பொது

ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் இணையுமாறு மாமன்னர் விடுத்த உத்தரவுக்கு ம.இ.கா இணக்கம்

25/11/2022 07:49 PM

கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்தின் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் இணையுமாறு மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா விடுத்திருக்கும் உத்தரவுக்கு ம.இ.கா இணங்குகிறது.

ஆனால், அமைச்சரவையில் எந்த ஒரு பதவியையும் ம.இ.கா. கோராது என்று, அதன் தலைவர் டான் ஶ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார்.

இது தொடர்பில் விளக்கம் பெற, பெர்னாமா செய்திகள் முயற்சித்தப்போது அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போனது.

ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் இணையுமாறு மாமன்னர் விட்டிருக்கும் உத்தரவுக்கு ம.இ.கா. இணங்கினாலும், கொள்கையில் உறுதியாக இருப்பதால், அமைச்சரவையில் எந்த ஒரு பதவியையும் அது கோராது என்று, டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எனினும், அமைச்சரவையில் ம.இ.கா உட்பட எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவது இடம்பெற்றால், அவர்களுக்கு தாம் வாழ்த்துக் கூறுவதாக, விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

15-வது பொதுத் தேர்தலில், பேராக், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட விக்னேஸ்வரன், நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் எஸ். கேசவனிடம் தோல்வியுற்றார்.

இத்தேர்தலில் தேசிய முன்னணி 30 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

அவற்றில், பாடாங் செராயைத் தவிர்த்து, மொத்தம் ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்ட ம.இ.கா., தாப்பா தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)