அரசியல்

எதிர்க்கட்சியாக இருக்கப் போகும் குறிப்பாணையை தக்கியுடின் தவறவிட்டிருக்கக் கூடும் - வான் சைஃபுல்

25/11/2022 07:51 PM

கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் சேருவதில்லை என்ற பெரிக்காத்தான் நேஷனலின் முடிவு குறித்த குறிப்பாணையை பாஸ் கட்சி தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தவற விட்டிருக்கலாம் என்று, பெர்சத்து கட்சி தகவல் பிரிவு தலைவர் வான் சைஃபுல் வான் ஜன் கூறினார்.
 
மக்களவையில் எதிர்க்கட்சியாகவே இருப்பது என்ற முடிவு குறித்த, பெரிக்காத்தான் தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசின், பாஸ் கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் மற்றும் கெராக்கான் தலைவர் டாமினிக் லாவ் ஆகியோருடனான  நேற்றுமுன்தின விளக்கக் கூட்டத்தில் பெரிக்காத்தானின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக அவர் கூறினார்.

ஆனால், அக்கூட்டத்தில் தக்கியுடினை தாம் பார்க்கவில்லை என்று, தெரிவித்தார்.

அவர் அக்கூட்ட குறிப்பாணையை தவறவிட்டிருக்கலாம் என்று கூறிய வான் சைஃபுல், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தங்களுக்குத் தெளிவாக புரிந்ததாக தெரிவித்தார்.

தமது ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் பங்கேற்குமாறு பெரிக்காத்தானுக்கு அழைப்பு விடுத்ததற்காக, அன்வாருக்கு தக்கியுடின் இன்று காலையில் நன்றி தெரிவித்திருந்தார்.

அதோடு, இந்த அழைப்பு குறித்து பெரிக்காத்தான் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளுடன் விவாதிக்கப்படும் என்றும் தக்கியுடின் கூறியிருந்தார்.

தக்கியுடினின் அறிக்கையை தாம் மதிப்பதாகக் கூறிய பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் ஃபைய்ஸ் நமான், பெரிக்காத்தான் கூட்டணியின் உயர் தலைமைத்துவத்தின் முடிவு அவசியம் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அரசாங்க நிர்வாகத்தில் ஜசெகவின் பங்கு குறைவாக இருந்தால் மட்டுமே, ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் பெரிக்காத்தான் நேஷனல் இணையக் கூடிய சாத்தியம் இருப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத பெர்சத்து உயர்மட்டத் தலைவர் ஒருவர் கோடிகாட்டினார்.

பெரிக்காத்தானைப் பொறுத்த வரையில், ஜசெகதான் தங்களுக்கு அலர்ஜியே தவிர நம்பிக்கை கூட்டணி அல்ல என்றும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)