அரசியல்

புதிய கார், அலுவலகம் புதுப்பித்தல் கிடையாது; ஒவ்வொரு ரிங்கிட்டும் கணக்கிடப்படும் -அன்வார்

27/11/2022 05:44 PM

காஜாங், 27 நவம்பர் (பெர்னாமா) -- பொதுமக்களின் ஒவ்வொரு ரிங்கிட்டு கணக்கிடப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரகடனமே செய்திருக்கின்றார்.

அதோடு, தாம் பயன்படுத்துவதற்காக புதிய அதிகாரப்பூர்வ கார் வாங்கப்படாது என்பதுடன் தமது பிரதமர் அலுவலகத்தில் புதுப்பித்தல் பணியும் மேற்கொள்ளப்படாது என்றும் அன்வார் அறிவித்திருக்கின்றார்.
 
தமது தலைமைத்துவத்தில் பண விரயம் அவசியம் தவிர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு புதிய கலாச்சாரத்தை கொண்டுவரவும் தாம் விரும்புவதாக அவர் கூறியிருக்கின்றார்.

"ஏழ்மையில் உள்ளவர்களுக்கு திருப்பித் தருவதற்காக 100 ரிங்கிட், 1,000 ரிங்கிட், 10,000 ரிங்கிட்டை உங்களால் சேமிக்க முடிவதைப் பற்றி சிந்தியுங்கள் . எனது சம்பளத்தைப் பெறுவதில்லை என்ற ஓர் ஈடுபாட்டுடன் இதை நான் தொடங்கி இருக்கின்றேன். ஆனால், நாம் கொண்டிருக்கும் பணத்தை விரயம் செய்யக் கூடாது என்பது மிக முக்கியம்" என்று அன்வார் கூறியிருக்கின்றார்.

"நடப்புச் சூழ்நிலையில், ஒரு புதிய கலாச்சாரத்தை நாம் தொடங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பது, அனைத்துத் துறைத் தலைவர்களுக்குமான செய்தியாகும். நமது சொந்த வசதிகளுக்காக அரசாங்கத்தின் பணத்தைப் பயன்படுத்தாதீர்கள்" என்று பிரதமர் வலியுறுத்தி இருக்கின்றார்.

முந்தைய அரசாங்கங்களில் அவ்வப்போது நிகழ்ந்த விரயத்தைத் தவிர்க்கும் முயற்சியாக, சிறந்த வழியில் அரசாங்கத்தின் அனைத்து பணமும் பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர், காஜாங், சுங்கை லோங்கில் உள்ள அஸ்ஹாபுஸ் சொலிஹின் பள்ளிவாசலில் நேற்று நடந்த நன்றி கூறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அன்வார் இதனைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)