அரசியல்

நீதிமன்றத்தில் வழக்கு உள்ளவர்கள் அமைச்சரவையில் இடம்பெறக்கூடாது - கெஅடிலான் உதவித் தலைவர்

27/11/2022 01:05 PM

கோலாலம்பூர், 27 நவம்பர் (பெர்னாமா) - பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்நோக்கி இருப்பவர்கள் இடம்பெற்றிருக்கக்கூடாது என்று செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

இது மிகவும் கட்டாயம் என்றும் தாங்கள் எதிர்நோக்கி இருக்கும் வழக்கில் இன்னும் குற்றவாளி என்று இன்னும் கண்டுபிடிக்காவிட்டாலும் அத்தகையோர் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கக்கூடாது என்று நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்தார்.

நீதிமன்ற வழக்குகள் உள்ளவர்களால் பின்னாளில் பிரச்சனைகள் வராமல் தடுக்க அத்தகையோர் அமைச்சரவையில் இடம்பெறிருக்காமல் இருப்பதே நல்லது என்று கெஅடிலான் கட்சி உதவித் தலைவருமான நிக் நஸ்மி கூறினார்.

அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருக்கும் லஞ்ச ஊழல் வழக்குகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து கவலைக் கொண்டிருப்பதாகவும் நீதிமன்றங்களில் விசாரணையை எதிர்நோக்கி இருப்பவர்கள் அமைச்சரவையில் இடம்பெறாமல் இருந்தால் மக்களின் கவலைக்கு ஒரு முடிவு பிறந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கட்சியிலும் அமைச்சர் பதவிகளை வகிக்கக் கூடிய தகுதி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதை ஒப்புக்கொண்ட நிக் நஸ்மி அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் பல்வேறு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார்.

தற்போதைய நிலவரப்படி, அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹாமிடி, ஜசெக தலைவர் லிம் குவான் எங், மூடா கட்சித் தலைவர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் மற்றும் சபா மாநில அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் ஆகியோரும் நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கி இருக்கின்றனர்.

அன்வார் தலைமையிலான ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி, காபுங்ஙான் பார்டி சரவாக் (ஜிபிஎஸ்) மற்றும் காபுங்ஙான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) ஆகிய கூட்டணிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இவற்றைத் தவிர்த்து, மூடா, வாரிசான், பார்டி பங்சா மலேசியா (பிபிஎம்) மற்றும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்வாரின் ஒருமைப்பாட்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி இருக்கின்றனர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)