GE15 NEWS  
பொது

மோசமான நடத்தையினால் குடிநுழைவுத் தடுப்பு முகாமில் கைதி உடல் மெலியவில்லை

09/12/2022 04:09 PM

கோத்தாகினபாலு, 09 டிசம்பர் (பெர்னாமா) -- சபா, கிமானிஸ் குடிநுழைவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டவரின் உடல் மெலிந்து காணப்படுவதற்கு அத்துறையினரின் மோசமான நடத்தையே காரணம் என்று கூறப்படுவதை உள்துறை அமைச்சு மறுத்திருக்கிறது.

குடிநுழைவு துறை தமக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், தடுப்பு முகாமிற்குள் செல்வதற்கு முன்பே, சம்பந்தப்பட்ட கைதியின் உடல் நிலை மெலிந்தும் பலவீனமாகவும் காணப்பட்டதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறுகின்றார். 

"முதலில், சம்பந்தப்பட்டவரை நாங்கள் பார்க்க வேண்டும், அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கும் ஒரு சாதாரண குடிமகனா அல்லது உடல் மெலிவதற்கான செயல்களில் ஏதும் உண்மையில் ஈடுபடுகிறாரா என்பது கண்டறியப்படும்" என்று நசுத்தியோன் தெரிவித்தார்

தடுப்பு முகாமில் உள்ள கைதிகளுக்கு போதுமான உணவு வழங்கப்படாமல், அவர்கள் குடிநுழைவுத் துறையினரால் மோசமாக நடத்தப்படுவதாக, பரலாக பகிரப்பட்டு வரும் காணொளி குறித்து வினவப்பட்ட கேள்விக்கு நசுத்தியோன் இவ்வாறு பதிலளித்தார். 

90 வினாடிகள் கொண்ட அந்த காணொளியில், தம்மை சோலமன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர்,  தம்மையும் தமது நண்பரையும் விரைவில் விடுவிக்குமாறு, சபா முதமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோரிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டது பதிவாகி இருந்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)