பொது

அழைப்பு விசா மூலம் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்குக் கொண்டுவர அனுமதி

09/12/2022 05:38 PM

புத்ராஜெயா, 09 டிசம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி டிசம்பர் நான்காம் தேதி வரையில், வி.டி.ஆர் எனப்படும் அழைப்பு விசா மூலம் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்குக் கொண்டுவர, மூன்று லட்சத்து 73 ஆயிரத்து 459 விண்ணப்பங்களுக்கு மலேசிய குடிநுழைவுத் துறை அனுமதி அளித்திருக்கிறது.

அவர்களில், இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 677 அந்நியத் தொழிலாளர்கள் அல்லது 68 விழுக்காட்டினர் தொழிற்சாலை மற்றும் தோட்டத் தொழில்துறைகளில் வேலை செய்வதற்காகத் தருவிக்கப்பட்டிருக்கின்றனர்.

அழைப்பு விசா கிடைத்துவிட்ட போதிலும் நாட்டுக்கு இன்னும் அழைத்து வரப்படாததால் அத்தொழிலாளர்களுக்கான செலவுகளை முதலாளிகளே கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

"அனுமதி கிடைத்திருந்தாலும் முதலாளிகள்தான் அவர்களை அழைத்து வருவது உட்பட இதர செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அந்நியத் தொழிலாளர்களின் நாடுகளில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில செயல்முறைகளும் திட்டங்களும் இருக்கின்றன," என்று சைஃபுடின் நசுத்தியோன் கூறினார்.

புத்ராஜெயாவில் இன்று வெள்ளிக்கிழமை மலேசிய குடிநுழைவுத்துறையின் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது சைஃபுடின் இவ்வாறு தெரிவித்தார்.

நான்கு லட்சத்து மூவாயிரத்து 869 விண்ணப்பங்களில் முப்பதாயிரத்து 410 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்ற வேளையில், அவற்றிற்கு ஏழு வேலை நாள்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்காலிக வேலைக்கான பயண அட்டையைக் கொண்டு சுமார் 14 லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் மலேசியாவில் இருப்பதாகச் சைபுடின் குறிப்பிட்டார்.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)