போலி பணக் கோரிக்கை செய்ததாக மூவர் மீது குற்றச்சாட்டு

16/01/2023 02:22 PM

ஆயர் குரோ, 16 ஜனவரி (பெர்னாமா) -- போலி பணக் கோரிக்கையைச் சமர்ப்பித்ததாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மூவர், மலாக்கா, ஆயர் குரோ செஸ்ஷன் நீதிமன்றத்தில் மறுத்தனர்.

வேலை வாய்ப்புத் திட்டம் 2.0-திற்காக ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 400 ரிங்கிட் தொகை சம்பந்தப்பட்ட பணக் கோரிக்கையை பெர்கேசோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு அமைப்பிடம் சமர்ப்பித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

நீதிபதி எலிசபத் பாயா வான் முன்னிலையில் தங்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், நூருல் அயின் சம்சுடின் (வயது 30), அஸ்மிடா ஷாஃபிகா அப்துல் ரஹ்மான் (வயது 25) மற்றும் முஹ்மட் ஹஃபிசி அப்துல் ஜமால் (வயது 30) ஆகியோர் அதை மறுத்தனர்.

இம்மூவரும் 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் செக்‌ஷன் 18 -டின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கின்றனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை அல்லது மொத்தத் தொகையில் ஐந்து மடங்கிற்குக் குறையாத அபராதமும் அவர்களுக்கு விதிக்கப்படலாம்.

நூருல் அயின் மற்றும் அஸ்மிடா ஷாஃபிகா ஆகிய இருவரும் தலா எட்டாயிரம் ரிங்கிட் ஜாமினிலும் முஹ்மட் ஹஃபிசி 20 ஆயிரம் ரிங்கிட் ஜாமினிலும் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெற விருக்கிறது.

-- பெர்னாமா