அரசியல்

சபாவையும் சரவாக்கையும் பிரதேசங்களாகப் பிரகடனம் செய்க -சாஃபி அப்டால்

24/01/2023 02:44 PM

கோத்தாகினபாலு, 24 ஜனவரி (பெர்னாமா) -- சபாவையும் சரவாக்கையும் பிரதேசங்களாகப் பிரகடனம் செய்ய வேண்டும். 

காரணம், தீபகற்ப மலேசியாவில் உள்ள மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அவ்விரு மாநிலங்களும் மாறுபட்ட அடையாளங்களைக் கொண்டிருப்பதாக, சபா வாரிசான் கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹ்மட் சாஃபி அப்டால் கூறுகிறார்.

நாடாளுமன்றத்தில், 112 (டி) சட்டத் திருத்த மசோதா அங்கீகரிக்கப்பட்டுவிட்டது.

சபாவையும் சரவாக்கையும் மாநிலங்களாக அழைக்காமல் பிரதேசங்களாக ஆக்குவதற்கு நடப்பில் உள்ள அடையாளங்கள் அல்லது வேறுபாடுகளைக் கொண்டிருப்பதும் அந்த சட்டத் திருத்தத்தில் அடங்கும் என்று, டத்தோ ஶ்ரீ முஹ்மட் சாஃபி அப்டால் தெரிவித்தார்.

இவ்விரு மாநிலங்களையும் பிரதேசங்களாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று, பிரதமர் துறையின் முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜபார் தெரிவித்திருக்கும் கருத்துக்கு சாஃபி அப்டால் அவ்வாறு கூறினார்.

"சபாவையும் சரவாக்கையும் ஏன் பிரதேசங்களாகப் பிரகடனம் செய்ய வேண்டும் என்றால், தீபகற்ப மலேசியாவில் உள்ள மாநிலங்களுடன் அவை பல மாறுபட்ட அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, 1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தில் (எம்ஏ63) சரவாக் குறிப்பிட்ட உரிமைகளையும் குடிநுழைவு அதிகாரத்தையும் கொண்டிருக்கிறது. பெர்லிஸ் முதல் ஜோகூர் வரைக்குமான இதர மாநிலங்களுக்கான சாசனங்களில் இந்த விவகாரம் எழுதப்பட்டிருக்கவில்லை. ஆதலால், சட்ட ரீதியில் அடிப்படைகள் எங்களுக்குத் தேவை. அரசியலமைப்புச் சட்டமும் சர்ச்சைக்குரியதாக ஆக்கப்படக் கூடாது" என்று சாஃபி அப்டால் கேட்டுக் கொண்டார்.     

சபா, கோத்தாகினபாலுவில், தஞ்ஜோங் ஆரு சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜுன்ஸ் வோங் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது சாஃபி அப்டால் அவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, சபா மற்றும் சரவாக் எல்லையில் உள்ள சுங்கத் துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு மையத்தின் ஆற்றல் மற்றும் கட்டமைப்பின் தரத்தை உயர்த்தும் பணியைத் தொடங்கும் நோக்கத்திற்காக 100 கோடி ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

அது குறித்து கருத்துக் கேட்டபோது, தம் சபா மாநில முதலமைச்சராக இருந்தபோது அது குறித்து குரல் கொடுக்கப்பட்டதாக சாஃபி அப்டால் தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)