பொது

முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஶ்ரீ ராம் காலமானார்

29/01/2023 04:36 PM

கோலாலம்பூர், 30 ஜனவரி (பெர்னாமா) -- நாட்டின் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ ஶ்ரீ கோபால் ஶ்ரீ ராம் இன்று நண்பகலில் காலமானார்.

அரசு தரப்பு மூத்த வழக்கறிஞருமான 79 வயதுடைய அவரின் மறைவை நம்பத்தகுந்த வட்டாரம் ஒன்று உறுதிப்படுத்தியது.

நுரையீரல் கிருமித் தொற்று காரணமாக அவர் கடந்த வாரத்தில் கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 1MDB ஊழல் வழக்கின் தலைமை அரசு தரப்பு வழக்கறிஞராக ஶ்ரீ ராம் செயல்பட்டார்.

நஜிப்பின் துணைவியார் டத்தின் ஶ்ரீ ரொஸ்மா மன்சோரின் ஊழல் வழக்கிலும் அவர் தலைமை அரசு தரப்பு வழக்கறிஞராக ஶ்ரீ ராம் செயல்பட்டார்.

கோலாலம்பூரில், கடந்த 1943-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி பிறந்த ஶ்ரீ ராம், இங்கிலாந்தில் சட்டக் கல்வியைக் கற்கச் செல்வதற்கு முன்னர் ஓர் ஆசியராகப் பணி புரிந்தார்.

கடந்த 1970 முதல் 1994-ஆம் ஆண்டு வரை வழக்கறிஞராக தொழில் புரிந்த அவர் நேரடியாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

1994-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரையில் மேல்முறையீடு மற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக இருக்கும்போது சுமார் 800 தீர்ப்புகளை எழுதியிருக்கின்றார்.

குற்றச் செயல்கள், சட்டம், நிர்வாகம் மற்றும் வர்த்தகக் குற்றச் செயல் வழக்குகளில் பிரசித்தி பெற்ற தீர்ப்புகளையும் அவர் வழங்கி இருக்கின்றார்.

2010-ஆம் ஆண்டில் பதவி ஓய்வுப் பெற்ற பின்னர் அவர் திரும்பவும் தமது வழக்கறிஞர் தொழிலைத் தொடர்ந்தார்.

அவருக்குச் சந்திரா ஶ்ரீ ராம் என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)