அரசியல்

அம்னோ தேர்தல் திட்டமிட்டபடி  நிச்சயம் நடந்தே தீரும்

29/01/2023 05:01 PM

பொந்தியான், 29 ஜனவரி (பெர்னாமா) -- சில அம்னோ தொகுதிகள் முடக்கம் செய்யப்பட்டிருந்தாலும் 191 அம்னோ தொகுதிகள் மற்றும் 22 ஆயிரம் அம்னோ கிளைத் தேர்தல்கள் நிச்சயம் புதன்கிழமை முதல் நடைபெறும்.

அம்னோ தொகுதித் தேர்தல்களை நடத்துவதற்காகத் தொகுதி நிர்வாகிகளை அம்னோ நியமித்திருக்கிறது.

அவர்கள், முடக்கப்பட்ட அம்னோ தொகுதித் தேர்தலைகளை சுமூகமாக நடத்தி முடிப்பார்கள் என்று அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் கூறியுள்ளார்.

''ஆராவ் மற்றும் தானா மேரா தொகுதிகள் இன்னமும் தொடரப்படுகின்றன. நாங்கள் நியமித்து அறிவித்திருக்கும் அதிகாரிகள் அவற்றுக்கான தேர்தல்களை நடத்துவார்கள்.  ஆராவ் மற்றும் தானா மேரா ஆகிய இரண்டு தொகுதிகள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளன. அதனால் இம்முறை 191 தொகுதிகளுக்கும் 22 ஆயிரம் கிளைகளுக்கும் தேர்தல் நடைபெறும். 22 ஆயிரம் கிளைகளுக்கான தேர்தல்கள் 26 நாட்களுக்கு நடைபெறும்,'' என்று அவர் கூறினார்.

ஜோகூர், பொந்தியானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், ஏற்கனவே முடக்கப்பட்ட ஆராவ் மற்றும் தானா மேரா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அம்னோ தேர்தல் வரும் பிப்ரவரி முதல் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெறும் என்று நேற்று சனிக்கிழமை அக்கட்சி கூறியிருந்தது.

முதல் கட்டமாகக் கிளை நிலைகளில் மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளுக்கான தேர்தல் நடத்தப்படும்.

தொகுதி நிலையில் இளைஞர், மகளிர், புத்ரி பிரிவுகளுக்கான தேர்தல் மார்ச் 11-ஆம் தேதி நடைபெறும்.

மார்ச் 18-ஆம் தேதி அம்னோவின் தொகுதி நிலைகளில் அனைத்து பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும்.

அதேதினத்தில் அம்னோ உச்சமன்ற பதவிகளுக்கான தேர்தலும் ஏக காலத்தில் நடைபெறும் என்று அஹ்மாட் மஸ்லான் தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)