பொது

ஏ.ஆர். ரஹ்மானின் 30 ஆண்டுகால இசைப் பயணம்

29/01/2023 05:13 PM

புக்கிட் ஜாலில், 29 ஜனவரி (பெர்னாமா) -- தமது 30 ஆண்டுகால இசை பயணத்தை மலேசிய ரசிகர்களோடு கொண்டாடியிருக்கின்றார் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹமான்.

DMY CREATION நிறுவனத்தில் ஏற்பாட்டில் கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற SECRET OF SUCCESS எனும் இசைப் புயலின் நிகழ்ச்சியை பிரதமர் தம்பதியரோடு சுமார் 70 ஆயிரம் ரசிகர்கள் கண்டுக்களித்தனர்.

இந்திய சினிமாவால் மாபெரும் அடையாளத்தை உருவாக்கி உலக அளவில் புகழ் பெற்றிருக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நேற்றிரவு 8.30 மணியளவில் தொடங்கியது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரது துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி பாஃட்சில் மற்றும் மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக இதில் கலந்து கொண்டனர்.

பின்னணிப் பாடகர்கள் ஹரிஹரன், ஸ்வேதா மேனன், ஹரிசரண், ஜோனித்தா, ரட்சித்தா போன்ற கலைஞர்களுடன் SECRET OF SUCCESS நிகழ்ச்சி மலேசிய ரசிகர்களை இசை மழையில் பரவசமடையச் செய்திருந்தது.

முத்தாய்ப்பாக, நாட்டின் புகழ்பெற்ற பாடகி டத்தோ ஶ்ரீ சித்தி நோர் ஹாலிஸா  ஹரிசரனோடு இணைந்து பாடிய "முன்பே வா" பாடலுக்கு அங்கிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும் பாராட்டும் கிடைத்தது.

1992-ஆம் ஆண்டில் தனது இசைப் பயணதைத் தொடங்கிய ஏ.ஆர். ரஹமான் அன்றைய கால கட்டத்தின் புகழ்பெற்ற பாடல்களையும் பாடி, பழைய நினைவுகளில் ரசிகர்களை மூழ்கடிக்கச் செய்தார்.

நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து நிகழ்ச்சியைக் காண வந்திருந்த ரசிகர்களுக்காக மூன்றரை மணிநேரம் தொடர்ந்த இந்த இசை விருந்து சுமார் 11.50 மணியளவில் நிறைவடைந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)