பொது

பினாங்கு தைப்பூசத்தில் லட்சக் கணக்கானோர் கூடுவர்

29/01/2023 05:17 PM

ஜார்ஜ்டவுன், 29 ஜனவரி  (பெர்னாமா) -- இவ்வாண்டு தைப்பூச கொண்டாட்டத்திற்கு இன்னும் எஞ்சியிருப்பது ஒரே வாரம்தான்.

சம்பந்தப்பட்ட கோயில்களில் அக்கொண்டட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் கிட்டதட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் இருக்கிறது.

மேலும், கூட்ட நெரிசல்களைத் தவிர்க்க பல பக்தர்கள் கடந்த சில நாட்களாகவே தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்தத் தொடங்கியும் விட்டனர்.

இந்நிலையில், இவ்வாண்டு பினாங்கு தைப்பூசத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொவிட்-19 தாக்கத்தினால் செயல்பாட்டு தர விதிமுறையை பின்பற்றி எளிமையான முறையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டது.

ஆனால், கொவிட்-19 விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதால், இவ்வாண்டில், பினாங்கு தைப்பூசத்தில் மக்கள் கூ௶௶அம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பினாங்கு தண்ணீர்மலை ஶ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் டத்தோ ஶ்ரீ பி. குவன ராஜூ தெரிவித்தார்.

''வெள்ளிக்கிழமை தொடங்கி கூட்டம் அதிகமாக இருக்கும். விடுமுறை நாளாகவும் உள்ளது. மக்களுக்காக பல வசதிகளை செய்து வைத்து நாங்கள் தயாராக உள்ளோம்,'' என்றார் அவர்.

இதனிடையே, பக்தர்களுக்காக மருத்துவ வசதிகள், உணவு, தண்ணீர் உட்பட பல வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் குவன ராஜூ தெரிவித்தார்.

பிப்ரவரி நான்காம் தேதி அதிகாலை 6.00 மணிக்கு தங்க ரத ஊர்வலம் லெபோ குயின் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்திலிருந்து தொடங்கி பின்னிரிவு12 மணியளவில் தண்ணீர்மலை ஶ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அப்போது நிலவும் சாலைப் போக்குவரத்து மற்றும் வாகன நெரிசலை பொறுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பக்தர்களின் நடவடிக்கைகள் இந்து மக்களை பிரதிபலிக்கும் என்பதால் இரத ஊர்வலத்தின்போது தூய்மை அடிப்படையில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மற்றொரு நிலவரத்தில், வெள்ளி ரத ஊர்வலம் லெபோ பினாங்கு சாலையில் இருந்து காலை 7 மணிக்கு நகரத்தார் ஆலயத்திலிருந்து தொடங்கி, பின்னிரவு ஒன்று அல்லது இரண்டு மணியளவில் தண்ணீர்மலை ஶ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தை வந்தடையும் என்று பினாங்கு, நகரத்தார் தண்டாயுதபாணி ஆலய அறங்காவலர் டாக்டர் ஏ. நாராயணன் தெரிவித்தார்.

''இந்த வெள்ளி ரதத்தை நாங்கள் பாதுகாப்பாக பராமரித்து வருகின்றோம். தைப்பூசத்தின் போது ரதத்தை அலங்கரித்து ஊர்வத்திற்கு தயார்ப்படுத்துவோம்,'' என்றார் அவர்.

இந்த வெள்ளி ரதம், சுமார் 135 ஆண்டுகளாக பினாங்கு தைப்பூசத் திருவிழாவிற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)