அரசியல்

லஞ்ச நடவடிக்கையில் ஈடுபட்டால் சமரசம் காணப்படாது -பிரதமர்

29/01/2023 07:43 PM

தம்புன், 29 ஜனவரி (பெர்னாமா) -- லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுமாறு மலேசிய லஞ்ச தடுப்பு ஆணையத்திற்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களாகவோ அல்லது எந்தக் கட்சியினராகவோ இருந்தாலும், லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அதில் சமரசம் காணப்படாது என்றும் பிரதமர் தீர்க்கமாகக் கூறியிருக்கின்றார்.

"யாரென்றும் பார்க்காதீர்கள். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளையோ எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதையோ உட்பட எதையும் பார்க்காதீர்கள். பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தால் நடவடிக்கையை எடுங்கள் என்று லஞ்ச தடுப்பு ஆணையத்திற்கு நான் உத்தரவிட்டிருக்கின்றேன் "என்று பிரதமர் தெரிவித்தார்.

இதனிடையே, அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள், கெஅடிலான்  கட்சியில் இணையுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பது குறித்த விவகாரம் இன்னும் எழவில்லை என்று பிரதமர் கூறினார்.

இருப்பினும், இது குறித்த விவகாரம் எழுந்தால், கட்சி அடிப்படையில் கலந்து பேசப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

பேராக், தம்புன் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும்போது பிரதமர் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)