விளையாட்டு

மலையேறும் சைக்கிளோட்டப் வீரங்கனைக்கு பாலியல் தொல்லை; விரைந்து நடவடிக்கை எடுக்க கே.பி.எஸ் வலியுறுத்து

01/04/2023 07:11 PM

கோலாலம்பூர், 01 ஏப்ரல் (பெர்னாமா) -- மலையேறும் சைக்கிளோட்டப் வீரங்கனை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக, ஊடகங்கள் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து, பாதுகாப்பான விளையாட்டுக் குறியீட்டிற்கு ஏற்ப, தேசிய விளையாட்டு மன்றத்தில் (எம்.எஸ்.என்) பாதுகாப்பு அதிகாரிகளை தமது அமைச்சு நிர்ணயித்துள்ளதாக, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹான்னா இயோ தெரிவித்தார்.

மேலும், இவ்வழக்கின் விசாரணை விரைவாக மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, எம்.எஸ்.என் அளவில் தமது தரப்பு கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார்.

''பயிற்சியாளர், விளையாட்டு வீரர் அல்லது வேறு யாராக இருந்தாலும் அதைப் பற்றி கவலையில்லை. குற்றமிழைத்தவர் நாட்டின் முதல் நிலை விளையாட்டு வீரராக இருந்தாலும் அதை நான் பொருட்படுத்தமாட்டேன். இது போன்ற சம்பவங்கள் மற்றும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கினால், கே.பி.எஸ் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார் அவர்.

மேலும், பாதுகாப்பான விளையாட்டுக் குறியீட்டின் செயல்பாட்டு தர விதிமுறை SOP-யின் படிம இது எவ்வாறு கையாளப்படுகிறது என்பதற்கு இவ்வழக்கு ஓர் சிறந்த உதாரணமாகப் பயன்படுத்தப்படும்.

இவ்வழக்கைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அப்பயிற்சியாளரை, தேசிய சைக்கிளோட்ட கூட்டமைப்பு நீக்கம் செய்வதற்கு முன்னதாகவே, அவரே பதவி விலகிக் கொண்டதையும் ஹன்னா சுட்டிக்காட்டினார்

இருப்பினும், இது ஏற்கனவே குற்றவியல் சட்டத்தின் கீழ் உள்ள வழக்கு என்பதால் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் விவரித்தார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட 20 வயதுடைய அப்பெண், தமது பயிற்சியாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, இரண்டு நாட்களுக்கு முன்னதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)