பொது

எந்நேரத்திலும் எனது சொத்துக்களை அறிவிக்கத் தயார் - அன்வார்

26/09/2024 07:57 PM

கோலாலம்பூர், 26 செப்டம்பர் (பெர்னாமா) -- எந்நேரத்திலும் தமது சொத்துக்களை அறிவிக்கத் தாம் தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் தமது தலைமைத்துவம் ஊழல், மோசடி மற்றும் நிர்வாகப் பிரச்சனைகளுடன் போராடி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

''சொத்துக்களை அறிவிக்கக் கேட்டுக் கொண்டால் கோபப்படுகிறார்கள். பழிவாங்குவதாக நினைக்கிறார்கள். என்ன பழிவாங்குவது? நீங்கள் தவறு செய்யவில்லை என்றால் சொத்துக்களை அறிவிப்பதில் எதற்கு பயம்? நான், நாளை கேட்டால் கூட எனது சொத்துக்களை மீண்டும் அறிவிப்பேன். எவ்வளவு வேண்டுமானாலும் பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு இருந்தால்தான் தலைவராக இருக்க முடியும். (பிறருக்கு) உதாரணமாக இருக்க முடியும். இல்லையென்றால் நாம் மக்களுக்கு எதை கற்பிக்க முடியும்?,'' என்று அன்வார் கேள்வி எழுப்பினார்.

சில தரப்பினர் மலாய், மதம் மற்றும் இஸ்லாம் ஆகியவை தொடர்பான பிரச்சனைகளை விவாதத்திற்கு உட்படுத்தி விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், நாட்டின் வளப்பத்தை கொள்ளையடிப்பதில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு முறையும் அரசாங்க ஒப்பந்தங்களை பரிசோதிக்கும்போது, மிகப்பெரிய நிதியை உட்படுத்தி லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கசிவும் மோசடியும் ஏற்படுகிறது.

இது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பதால், இவ்விவகாரம் தொடரக்கூடாது என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)