பொது

'ரொக்கமற்ற சமூகம்' ஃபெல்டா மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்

26/09/2024 08:44 PM

பெக்கான், 26 செப்டம்பர் (பெர்னாமா) -- ரொக்கமில்லா பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்படுவதால், ரொக்கப் பணத்தை பெறுவதற்காக ஃபெல்டா சினி தீமோர் 2 குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள் 60 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க வேண்டிய அவசியமில்லை.

புறநகர் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு துரிதமான மற்றும் பாதுகாப்பான கட்டண பரிவர்த்தனைகளை கொண்ட  இலக்கவியல் சூழல் அமைப்பு சிறந்த திட்டமாக கருதப்படுகிறது.

அதோடு, ஃபெல்டாவில் வசிக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாம் தலைமுறையினர் தொழில்முனைவோர் துறையில் ஈடுபடவும் ஆர்வம் செலுத்துகின்றனர்.

மேலும்,  அதன் கிளைகளை பல்வகைப்படுத்துவதற்கும் ஃபெல்டா மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும்.

இளம் தொழில்முனைவோர் பணம் சார்ந்து சிக்கலை எதிர்நோக்குவதால் அரசாங்கத்தின் ரொக்கமில்லா பரிவர்த்தனை முறை ஃபெல்டா மக்களின் புதிய நம்பிக்கையாக உள்ளதாக பெர்னாமாவுடனான சந்திப்பில் ஃபெல்டா சினி தீமோர் 2 குடியிருப்புப் பகுதியின் தலைவர் முஹ்மட் சாரிட் அப்துல் மானாஃப் தெரிவித்தார்.

ATM எனப்படும் பணம் பட்டுவாடா இயந்திரம் ஃபெல்டா சினி தீமோர் 1-இல் ஒன்றும் புசாட் தெனுன் சினி 3-இல் இரண்டும் உள்ளன.

இருப்பினும், மாத இறுதியில் போதுமான பணம் அந்த பட்டுவாடா இயந்திரத்தில் இருப்பதில்லை என்றும் மக்கள் பணத்தை எடுக்கச் செல்லும்போது அவை பயன்பாட்டில் இருப்பது இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதனைத் தவிர்ந்து, முவாட்ஷாம் ஷா அல்லது பெக்கான் நகரில்தான் ATM  உள்ளது.

போக்குவரத்து வசதி இல்லாதவர்களுக்கும் அது சிரமத்தை ஏற்படுத்துகிறது. 

இது பெரிய பிரச்சனையாக இல்லை என்றாலும் பணம் பெறுவதில் சிரமம் ஏற்படும் போது சிறு வர்த்தகர்களுக்கும் மக்களுக்கும் பிரச்சனை ஏற்படுவதாகவும் முஹ்மட் சாரிட் கூறினார்.

ரொக்கத்தில் இருந்து QR குறியீடு என்றழக்கப்படும் இலக்கவியல் பரிவர்த்தனைக்கு மாற்றி ரொக்கமில்லா சமூக திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் உள்ளூர் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும் என்றும் அவர் கருதுகின்றார்.

பஹாங் மாநிலத்தில், Cashless @ NADI திட்டம், NADI ஃபெல்ட சினி தீமோர் 2 உட்பட 15 இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முன்முயற்சியின் முக்கிய கவனம் சிறு மற்றும் குறு வர்த்தகர்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை செய்யவும் பெறவும் முடியும்.

 -- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)