விளையாட்டு

2024/2025 மலேசிய கிண்ணம்: கிளந்தானை வீழ்த்தியது பேராக்

23/11/2024 05:51 PM

பெட்டாலிங் ஜெயா, 23 நவம்பர் (பெர்னாமா) -- 2024/2025 மலேசிய கிண்ணம்.

பெட்டாலிங் ஜெயா மாநகராண்மைக் கழக அரங்கில் நேற்று நடைபெற்ற தொடக்க சுற்றில் கிளந்தான் டாருல் நாயிம், கே.டி.என்-ஐ 3-0 என்ற கோல் கணக்கில் பேராக் எஃப்.சி வீழ்த்தியது.

ஆட்டம் தொடங்கி 22-வது நிமிடத்தில் பிரேசில் இறக்குமதி ஆட்டக்காரரான கிலேட்டன் ட சில்வா பேராக் எஃப்.சி-க்கான முதல் கோலை அடித்தார்.

அதனைத் தொடர்ந்து, ட சில்வா அளித்த பந்தை, முஹமட் நூர் அஸ்ஃபார் ஃபிக்ரி அஸ்ஹார் லாவகமாக கோல் ஆக்கி ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் பேராக் எஃப்.சி-க்கான இரண்டாம் கோலை அடித்தார்.

இறுதியாக, பேராக் எஃப்.சி கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை பயன்படுத்தி அஹ்மாட் டேனியல் ஹக்கிமி அஹ்மாட் அஸ்மில் அவ்வணிக்கான மூன்றாவது கோலை புகுத்தினார்.

இதனிடையே, டாருல் அமான் அரங்கில் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் கெடா டாருல் அமான், கே.டி.ஏ  எஃப்.சி, கே.எல் சிட்டி எஃப்.சி-ஐ தோற்கடித்தது.

ஆட்டம் தொடங்கிய 13-வது நிமிடத்தில் கே.எல் சிட்டி ஆட்டக்காரர் லீ கிட் செங் லம்பெர்ட் மூலம் அவ்வணிக்கு முதல் கோல் அடிக்கப்பட்டது.

எனினும், ஆட்டத்தின் 27 மற்றும் 30-வது நிமிடத்தில் தொடர்ச்சியாக கே.டி.ஏ அணியின் தலைவர் சோனி நொர்டெ இரு கோல்களை அடித்து அவ்வணியை உற்சாகப்படுத்தினார்.

இறுதியாக, கே.டி.ஏ-வின் மத்திய திடல் ஆட்டக்காரரும், உஸ்பகிஸ்தான் Uzbekistan இறக்குமதி ஆட்டக்காரருமான சுக்ரோப் நுருலோவ் அவ்வணிக்கான மூன்றாவது கோலை, ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் பெற்றுத் தந்தார்.

ஆட்டத்தைச் சமநிலைப்படுத்த கே.எல் சிட்டி பல முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் ஆட்டம் 2-3 என்ற கோல் எண்ணிக்கையிலேயே நிறைவுப்பெற்றது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]