ஜோகூர் பாரு, 23 நவம்பர் (பெர்னாமா) -- 'இன்ஸ்பெக்டர் ஹரூன்' என்று வேடமிட்ட நபரிடம் நிறுவன இயக்குநர் ஒருவர், 10 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேலான தொகையை இழந்துள்ளார்.
தொலைபேசி அழைப்பின் வழியாக தாம் ஏமாற்றப்பட்டதாக 37 வயதான பெண் நேற்று புகார் அளித்ததைத் தமது தரப்பு பெற்றதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி மாலை மணி மூன்று அளவில் பொருள் அனுப்பும் நிறுவனம் ஒன்றிலிருந்து, பாதிக்கப்பட்டவர் பெற்ற தொலைபேசி அழைப்பினால் 11 லட்சத்து 40,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக டத்தோ எம். குமார் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் பெயரில் காசோலை புத்தகமும் வங்கியிலிருந்து பரிசும் அடங்கிய பொட்டலம் தங்களிடம் இருப்பதாக அந்நபர் தொலைபேசி அழைப்பில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் அதனை மறுத்த மறுகணமே, அது குறித்து புகாரளிக்க போலீஸ் என்று கூறப்பட்ட தரப்பிடம் அந்த அழைப்பு இணைக்கப்பட்டது.
‘இன்ஸ்பெக்டர் ஹரூன்’ என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அந்நபர் பாதிக்கப்பட்ட அப்பெண், ஏமாற்றுவது மற்றும் கள்ளப்பண பரிமாற்ற வழக்குகளில் சிக்கயிருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து அப்பெண் அச்சத்தினால் 11 லட்சத்து 40,320 ரிங்கிட்டை அந்நபர் அளித்த வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
இவ்வழக்கு, குற்றவியல் சட்டம் செக்ஷன் 420இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)