பொது

குழந்தைப் பெற்று கொள்வதில் ஏற்படும் சுணக்கத்தால் சமூகம், பொருளாதார ரீதியில் பாதிப்புகள்

26/11/2024 04:33 PM

கோலாலம்பூர், 26 நவம்பர் (பெர்னாமா) --   திருமணம், மனித இனப்பெருக்கத்திற்கு அடிப்படை ஆகும்.

ஆனால், தற்போதைய சூழலில் மண பந்தத்தில் இணையும் பெரும்பாலான தம்பதியர், குழந்தை பெற்று கொள்ளும் முடிவை தாமதப்படுத்துவதோடு, இன்னும் சிலர் அதை விரும்பாதவர்களாகவும் உள்ளனர்.

தங்களின் வாழ்க்கை சூழ்நிலை, உடல் ஆரோக்கியம், நிதி நிலைமை ஆகியவற்றை அதற்கு காரணங்களாகக் கூறினாலும், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் அம்முடிவு சில பாதிப்புகளை ஏற்படுத்துவது மறுப்பதற்கில்லை.

அவ்விவகாரம் குறித்த விளக்கத் தொகுப்பு, இன்றைய 'சமூக அரங்கம்' அங்கத்தில் இடம்பெறுகின்றது.

முந்தைய காலங்களில், குறிப்பாக இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையினர் வாழ்ந்த காலக்கட்டத்தில் தங்களுக்கென ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்று கொண்டு கூட்டு குடும்பங்களாக வாழ்ந்த காலங்கள் மாறி,

இன்று, ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக் கொள்வது அல்லது குழந்தையைப் பெற்று கொள்ளாமலே வாழ்வது என்ற நிலை உருவாகி விட்டது.

கூட்டு குடும்பங்கள் சிறு குடும்பங்களாக மாறியிருக்கும் நிலையில், அதற்கு தனிப்பட்ட முறையில் சில காரணங்களை அவர்கள் முன்வைப்பதாக கூறுகின்றார், கெடா, அலோர் ஸ்டார் சுல்தானா பாஹியா மருத்துவமனையின் ஓய்வுப் பெற்ற மகப்பேறு மருத்துவர் டத்தோ டாக்டர் பவானந்தம் நாயுடு கோபால்.

''தற்போதுள்ள தம்பதிகள் குடும்ப கட்டுப்பாடு தீர்வு நிறைய இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் எப்பொழுது குடும்பத்தை உருவாக்க விரும்புகிறார்களோ அப்போது அவர்கள் அதற்கு ஏற்றவாறு செய்து கொள்கின்றனர். அதனால் அவர்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை சிறியதாகவே இருக்கின்றது. ஆக, இதற்கான நோக்கம் என்னவென்றால் 'Quality is better than quantity' என்று சொல்வார்கள், அதற்கான நோக்கம்தான் இது'', என்று அவர் கூறினார்.

மேலும், தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பான்மையான பெண்கள் பருவ வயதில் திருமணம் செய்து கொள்ளாது, முதிர்கன்னியான பிறகு திருமணம் செய்து கொள்வதால் குழந்தை பேறு இல்லாமல் போவதும் ஒரு காரணமாக அமைவதாக, டாக்டர் பவானந்தம் விளக்கினார்.

''பெண்கள் இந்த காலக்கட்டத்தில் வயதான பிறகே திருமணம் செய்து கொள்கின்றனர். அதனால், அவர்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்து கொண்டு வருகின்றது. இது பொதுவாக நடக்கின்ற ஒரு விஷயம். இந்திய சமுதாயத்தை மட்டும் சார்ந்திருக்கும் விஷயம் அல்ல. இது பொதுவாகவே, மலேசியர்களின் ஜனத் தொகையில் இம்மாதிரியான சூழ்நிலை நடந்து கொண்டு வருகின்றது'', என்றார் அவர்.

இதனிடையே, நாட்டில் வாழும் பிற சமூகத்தினருடன் ஒப்பிடுகையில் இந்திய சமூகம் சிறுப்பான்மையாக இருப்பதால் இவ்விவகாரம் அதன் எண்ணிக்கையில் மேலும் சரிவை ஏற்படுத்தும்.

அதோடு, எதிர்காலத்தில் பணி இடங்களில் ஆள்பல பற்றாக்குறை போன்ற சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்று பொருளாதார நிபுணர் பேராசிரியர் முனைவர் முடியரசன் குப்புசாமி தெரிவித்தார்.

''2010-இல் இந்திய சமூகத்தில் 1.7 விழுக்காடு குழந்தைகள் ஒரு பெண்ணிற்கு என்ற கணக்கு உள்ளது. 2022-இல் 1.1 விழுக்காடாக குறைந்துள்ளது. ஆக, இது பொருளாதார ரீதியில் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் நம்முடைய தொழிலாளர்களின் தேவை, பொருளாதாரத்தில் நம்முடைய ஈடுபாடு ஆகிய அனைத்தும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்'', என்று அவர் கூறினார்.

அதோடு, நாட்டில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து, வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானால் அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் பாதிப்பது மட்டுமல்லாமல் அரசாங்கத்திற்குப் பல்வேறு சவால்களை ஏற்படுத்த கூடும் என்றும் அவர் விவரித்தார்.

''2044-ஆம் ஆண்டிற்குள் 15 விழுக்காட்டிற்கும் அதிகமான மலேசியர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பர்.  15 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கும்போது இது பொருளாதார ரீதியில் அரசாங்கத்திற்கு பெரிய பாதிப்பாக இருக்கும். ஏனென்றால், சமூக உறவு, சமூகவியல் ஆதரவு மற்றும் பணி ஆகிய அனைத்திற்கும் அரசாங்கம் நிறைய செலவு செய்ய நேரிடும்'', என்று அவர் விளக்கினார்.

எனவே, வாழ்க்கை செலவினம், வேலை, சுதந்திரம் ஆகிய காரணங்களை முன்னிருத்தி சில தம்பதியினர் குழந்தைப் பெற்று கொள்வதில் விரும்பம் இல்லாமல் இருக்கின்ற போதிலும், அவர்களுக்குப் பொருளாதார ரீதியில் உதவிகளையும் திட்டங்களையும் வழங்க அரசாங்கம் அவ்வப்போது தயாராக இருப்பதை மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சும் வலியுறுத்தி வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)