உலகம்

உக்ரேன் அணு ஆயுதங்களை வாங்கினால் தனது அனைத்து ஆயுதங்களும் பயன்படுத்தப்படும் - ரஷ்யா எச்சரிக்கை

29/11/2024 02:23 PM

அஸ்தானா, 29 நவம்பர் (பெர்னாமா) -- உக்ரேன் அணு ஆயுதங்களை வாங்கினால் அந்நாட்டிற்கு எதிராக ரஷ்யா தன் வசம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தும் என்று அதன் அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி விலகுவதற்கு முன்பு உக்ரேனுக்கு அணு ஆயுதங்களை வழங்கலாம் என்று The New York Times கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.

உக்ரேனுக்கு அணு ஆயுதங்களை வழங்க மேற்கத்திய அதிகாரிகள் சிலர் பைடனுக்கு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் அந்த அதிகாரிகளின் விவரம் வெளியிடப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, உக்ரேனின் ஒவ்வோர் அசைவும் இனி துல்லியமாக கண்காணிக்கப்படும் என்று கசக்ஸ்தான், அஸ்தானாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் புதின் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா உக்ரேனுக்கு அணு ஆயுதங்களை வழங்கினால் அணு ஆயுதங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறுவதாக அர்த்தம் என்று அவர் விளக்கினார்.

உக்ரேன் அணுவாயுதத்தை தயாரிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்றாலும் கதிரியக்கப் பொருட்களைக் கொண்டு வெடிகுண்டுகளை அந்நாடு தயாரிக்க முடியும் என்று புதின் கூறினார்.

அம்மாதிரியான நடவடிக்கைகளில் உக்ரேன் ஈடுபட்டால் ரஷ்யா தகுந்த பதிலடி கொடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]