உலகம்

இந்தியாவிலிருந்து இறக்குமதியை அதிகரிக்க ஆசியான் நாடுகள் வழிகளை ஆராய வேண்டும்

29/11/2024 06:42 PM

புது டெல்லி, 29 நவம்பர் (பெர்னாமா) -- இந்தியாவிற்கும் ஆசியானுக்கும் இடையில் உள்ள சமநிலையான வர்த்தக உறவு நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்பதால் அது ஒரு தரப்பிற்கு மட்டும் சாதகமாக இருக்கக்கூடாது.

எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதியை அதிகரிக்க ஆசியான் நாடுகள் வழிகளை ஆராய வேண்டும் என்று இந்திய வர்த்தகத் துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.

ஆசியானிலிருந்து மொத்தம் 8,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியா இறக்குமதி செய்வதாக Rajesh Agrawal குறிப்பிட்டார்.

இது அந்நாட்டின் மொத்த இறக்குமதி மதிப்பில் 11 விழுக்காடு ஆகும்.

எனினும், ஆசியானுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாகக் குறைந்து 4,000 கோடி அமெரிக்க டாலராக பதிவாகிய நிலையில், இது ஆசியானின் மொத்த இறக்குமதியில் 2.2 விழுக்காடு மட்டுமே என்று அவர் கூறினார்.

''இந்த விற்பனையை அதிகரிப்பதற்கான கூடுதல் வழிகளை நாம் கண்டறிந்தால் இந்தியாவிலிருந்து அதிக இறக்குமதிகளை மேற்கொள்ளலாம். நாம் அணுகக்கூடிய இன்னும் மிகப் பெரிய வர்த்தகம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தியாவும் ஆசியானிடமிருந்து இன்னும் அதிகமாக வாங்க முடியும். ஏனெனில், வணிக சமநிலை வளர்ந்து வரும் வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமானது, ''' என்றார் அவர்.

அண்மையில், இந்தியா, புது டெல்லியில் உள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜேஷ் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)