Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

இனவெறியைத் தூண்டும் செயல்களுக்கு மக்கள் கவனம் செலுத்தக் கூடாது - அன்வார்

19/07/2025 05:50 PM

பத்து காவான், 19 ஜூலை (பெர்னாமா) - நல்லிணக்கத்தைப் பாதிக்கக் கூடிய இனவெறியைத் தூண்டும் செயல்களுக்கு மக்கள் கவனம் செலுத்தக் கூடாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

மாறாக, மலேசியாவின் பலமாக கருதப்படும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய அம்சத்தில் கவனம் செலுத்தி நாட்டை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இன உணர்வு மூலம் நாட்டின் முன்னேற்றத்தை அடைய முடியாது என்றும் நிலைத்தன்மையும் நல்லிணக்கமும் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான அடித்தளங்கள் என்பதையும் பிரதமர் விளக்கினார்.

எந்தவொரு இனத்தையும் குறிப்பாக சிறுபான்மை சமூகங்களையும் உட்படுத்தி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் முயன்று வருவதாக அவர் கூறினார்.

''மலேசிய மக்களுக்கு நான் ஒரு நினைவூட்டலை வழங்க வேண்டும். இது ஒரு பொறுப்பு. நீங்கள் தேர்வு செய்ய விரும்பினால், இந்த நாட்டைக் காப்பாற்ற விரும்பினால். நாம் நமது நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும். இதுவே நமது பலம். உலகில் உள்ள எந்தத் தலைவரிடமும் கேளுங்கள். மற்ற நாட்டில் உள்ள மக்களிடம் கேளுங்கள். மலேசியாவில் என்ன அவ்வளவு சிறப்பு? மலாய், இஸ்லாம் பெரும்பான்மையாக இருந்தாலும் நாம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இபான், கடசான் அனைவரையும் பாதுகாத்தால் நம் நாடு பாதுகாப்பாக இருக்கும்,'' என்றார் அவர்.

பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்து தரப்பினரும் கலந்துரையாடல்கள் மூலம் விரிவான அணுகுமுறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும், பிரதமரை பதவி விலக வலியுறுத்துவது உட்பட உணர்வுகளைத் தூண்டக் கூடாது என்றும் அன்வார் விவரித்தார்.

இன்று, பினாங்கு பத்து காவான் அரங்கில் 2025-ஆம் ஆண்டின் தேசிய அளவிலான ஒருமைப்பாட்டு வாரத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய திட்டங்களுக்காக ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு கூடுதலாக ஒரு கோடி ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று நிதியமைச்சருமான அன்வார் அறிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)