அரசியல்

கெடாவில் முக்ரிஸ் ஆட்சி கவிழ்ந்தது!

12/05/2020 08:06 PM

சுங்கை பட்டாணி, 12 மே (பெர்னாமா) -- கெடா மாநிலத்தில் நிலவி வந்த அரசியல் நெருக்கடிக்கு இன்று தீர்வு கிடைத்திருக்கிறது. 

அம்மாநிலத்தில் உள்ள 36 சட்டமன்றத்தில், 23 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து, பெரிகாத்தான் நேஷனல் புதிய கெடா மாநில அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்திருக்கிறது. 

மாநில எதிர்கட்சித் தலைவர், முகமட் சனுசீ முகமட் நோரின் அறிவிப்பின்படி, அந்த 23 சட்டமன்ற உறுப்பினர்களில், 15 பேர் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், இருவர், தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள், நால்வர் பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் கெஅடிலான் கட்சியில் இருந்து இன்று வெளியேறியிருக்கும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.

லுனாஸ் சட்டமன்ற உறுப்பினர், அஸ்மான் நஸ்ருடின் மற்றும் சிடாம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரோபர்ட் லிங் குய் யீ ஆகிய இருவரும் கெஅடிலான் கட்சியில் இருந்து வெளியேறி, சுயேட்சை என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும், பெரிகாத்தான் நேஷனலுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். 

அதனைத் தொடர்ந்து, பெர்சத்து மற்றும் நம்பிக்கைக் கூட்டணியின் கீழ், மந்திரி புசார், டத்தோ ஶ்ரீ முக்ரிஸ் துன் மகாதீர் தலைமைத்துவத்தின் கீழ் இருந்த அரசாங்கம், இன்று பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. 

-பெர்னாமா