விளையாட்டு

பிரான்ஸ் தனது லீக் போட்டியை முடித்து கொண்டது

26/05/2020 08:07 PM

ஜெர்மனி, 26 மே (பெர்னாமா) -- கொவிட்19 பெருந்தொற்றின் தாக்கத்தால் உலக அளவில் காற்பந்து போட்டிகள் தடைபட்டு நின்ற சூழ்நிலையில் சில நாடுகள் தளர்வுகளுடன் தற்போது மீண்டும் ஆட்டங்களைத் தொடங்கி இருக்கின்றன. 

இந்நிலையில், டச்சு மற்றும் பெல்ஜியத்தை அடுத்து, 10 ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் கட்டத்தில், பிரான்சும் இந்த பருவத்தில் தனது லீக் போட்டிகளை முடித்துக் 
கொள்வதாக அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பும் தற்போது கிளம்பி இருக்கிறது.

பிரான்ஸ் லீக் போட்டிகள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புள்ளிப் பட்டியலில் 68 புள்ளிகளுடன் முதல் நிலையில் இருக்கும் பி.எஸ்.ஜி கிளப் லீக்கின் வெற்றியாளர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால், இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அந்த அறிவிப்பை மீட்டுக் கொள்ள வேண்டும் என்றும் லியோன் கிளப்பின் தலைவர் ஜீன் மிஷல் ஒலாஸ் எதிர்ப்பு குரல் கொடுத்திருக்கின்றார். 

இதனிடையே, மென்செஸ்டர் யுனைட்டட்டின் மார்க்கஸ் ரெஷ்ஃப்பொர்ட் காயம் காரணமாக விளையாட முடியாததால், அவருக்கு மாற்று ஆட்டக்காரராக, சீனாவின், ஷங்கை ஷென்ஹுவா கிளப்பில் இருந்து, ஒடியொன் இகாலோ கடந்த ஜனவரியில் தற்காலிக ஒப்பந்தத்தில் அழைத்து வரப்பட்டார். 

கொவிட்19 பெருந்தொற்று காரணத்தால் விளையாட முடியாத நிலையில் இருக்கும் இகாலோ, தற்காலிக ஒப்பந்தம் மே 31-ஆம் தேதியுடன் முடிவடைவது அக்கிளப்பில் தற்போது புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

-- பெர்னாமா