முகக் கவசத்தின் விலையைக் குறைக்க அமைச்சு திட்டம்

06/08/2020 05:29 PM

கோலாலம்பூர், 06 ஆகஸ்ட் (பெர்னாமா) --தற்போது ஒரு ரிங்கிட் 50 சென்னுக்கு விற்கப்படும்  மூன்று அடுக்கு முகக் கவசம் ஒன்றின் விலையை, 1 ரிங்கிட் 20 சென்னுக்கும் குறைவாக குறைப்பதற்கு உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சு திட்டமிட்டிருக்கிறது.

இது தொடர்பான பரிந்துரை விரைவில் நிர்ணயிக்கப்படும் என்று உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சர் டத்தோ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

''பொதுமக்களிடமிருந்து கருத்து பெறப்பட்டத்தைத் தொடர்ந்து நாங்கள் பேச்சுகள் நடத்தி விட்டோம். அதன்படி ரிம 1.20-க்கும் குறைவாக முகக் கவசத்தின் விலை குறைக்கப்படலாம். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நாங்கள் முடிவுச் செய்வோம்'', என்றார் அவர்.

நாடாளுமன்றத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற கேள்வி, நேரத்தின் போது, கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் KHOO POAY TIONG எழுப்பிய கேள்விக்கு டத்தோ அலெக்ஸாண்டர் நந்தா  இதனைத் தெரிவித்தார்.


தற்போது ஒரு ரிங்கிட் 50 சென்னுக்கு விற்கப்படுகிற ஒரு முகக் கவசம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கி, ஒரு ரிங்கிட் 20 சென்னுக்கு விற்கப்படும் என்று கடந்த ஜூலை மாதம் அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கொவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி நாட்டு மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

- பெர்னாமா