சிறப்புச் செய்தி

இந்திய ஆய்வியல் துறையை மேம்படுத்த ஓம்ஸ் பா.தியாகராஜனின் அறக்கட்டளை

06/08/2020 08:11 PM

கோலாலம்பூர், 06 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை சுதந்திரத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பல போராட்டங்களுக்கு இடையே 1959ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டு, இன்றும் மலேசிய இந்தியர்களின் மிகப்பெரும் சொத்தாக போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்காகவும், மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும், கடந்த 61 ஆண்டுகளாக இந்திய ஆய்வியல் துறை ஆற்றி வரும் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது. 

நமது அடையாளமாக திகழும் இந்திய ஆய்வியல் துறையை வலுபெறச் செய்ய, தொடர்ந்து பல்வேறு முயற்சிகளும் பல வளர்ச்சி திட்டங்களும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. 

அம்முயற்சிகளுக்கு உறுதுணையாக விளங்கும் வகையில், ஓம்ஸ் பா.தியாகராஜன் அறக்கட்டளை, இன்று அதிகாரப் பூர்வமாக உதயமானது. 

தென்கிழக்காசிய பல்கலைக்கழகங்களில் இந்திய ஆய்வியல் துறை தனித்துவமாக செயல்படுவது மலேசியாவின் மூத்த, முதன்மையான பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகம் என்பது இந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பெருமையாகும். 

எனவே, இது போன்ற அறக்கட்டளைகளை அமைப்பதன் வழி பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று ஆய்வியல் துறையின் தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் தெரிவித்தார். 

அனைத்துலக அளவிலான கருத்தரங்கு, ஆய்வுகள், சொற்பொழிவு, நூல் வெளியீடு மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குதல் போன்ற திட்டத்தை அறவாரியத்தின் வழி மேற்கொள்ள முடியும் என்றும் கிருஷ்ணன் மணியம் குறிப்பிட்டார். 

ஓம்ஸ் அறவாரியத்தின் முழு ஆதரவோடு அறிமுகமாகியுள்ள இந்த அறக்கட்டளைக்கு அவ்வறவாரியத்தின் சார்பாக முதல் கட்ட வைப்புத் தொகையாக ஒரு லட்சம் ரிங்கிட்டை அதன் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் வழங்கினார். 

அடுத்த ஆண்டு இதே நாளில் அறவாரியத்தின் ஒட்டுமொத்த ஆதரவில் 12,50,000 ஆயிரம் வெள்ளிவரை நிதி திரட்டப்படும் என்றும் ஓம்ஸ் தியாகராஜன் உறுதியளித்திருக்கிறார். 

இந்தியர்களின் வளர்ச்சிக்காகவும் தாய்மொழியின் மேம்பாட்டிற்காகவும் ஓம்ஸ் அறவாரியம் பல்வேறு உதவிகளை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறது. 

குறிப்பாக உயர்கல்வியில் இந்திய மாணவர்கள் அதிலும் தமிழ்ப்பள்ளியில் இருந்து கல்வி கற்று வந்த மாணவர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் தங்கப் பதக்க விழா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை பல்கலைக்கழக இந்திய ஆய்வில் துறையின் ஆதரவோடு நடத்தி வருவதாக ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்தார். 

இதனிடையே, மலாயா பல்கலைக்கழக கலைப்புல மேம்பாட்டிற்காக அத்துறைத் தலைவரிடம் 25 ஆயிரம் ரிங்கிட்டிற்கான காசோலையையும் ஓம்ஸ் அறவாரியம் இன்று வழங்கியது. 

இந்த அறக்கட்டளையானது இந்திய ஆய்வியல் துறை மட்டுமல்லாது, இந்திய சமுதாயத்திற்கும் சிறந்த வழிக்கோலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 

-பெர்னாமா