உலகம்

புது டெல்லியில் 24 மணி நேரத்தில் 25, 500 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவு

19/04/2021 07:54 PM

புது டெல்லி, 19 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்திய தலைநகர் புது டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில், 25 ஆயிரத்து 500 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன.

அங்கு, கொவிட்-19 நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும் மூன்றில் ஒருவருக்கு அந்நோய்க் கண்டிருப்பது உறுதிசெய்யப் பட்டிருக்கிறது.

இச்சூழ்நிலையைக் கையாள மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

புது டெல்லியில், கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 நோய்க் கண்டவர்களின் எண்ணிக்கை 24 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காட்டிற்கு அதிகரித்திருக்கிறது.

இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகள் மிக வேகமாக நிரம்புவதாக அரவிந்த் கெஜ்ரிவால்  தெரிவித்தார்.

எனவே படுக்கைகளும் சுவாச உதவிக் கருவியும் அதிகமாக தேவைப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக புது டெல்லி நகராண்மைக் கழகம் குறிப்பிட்டிருக்கிறது.

இதனிடையே, அந்நாட்டில், தினசரி சம்பவங்கள் புதிய உச்சத்தை அடைந்து வரும் வேளையில், திங்கட்கிழமை மட்டும், இரண்டு லட்சத்து 73,810 புதிய சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டில் இந்த நோய்க் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்தை எட்டி இருக்கிறது.

அதோடு, மரண எண்ணிக்கையும் 1,619-ஆக பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்நோயினால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 78,769-ஆக அதிகரித்திருக்கிறது.

-- பெர்னாமா