சிறப்புச் செய்தி

ம.இ.கா மகளிர் பிரிவுக்கான தேர்தலில் பதவியை தற்காத்து போட்டியிடுவேன் - உஷா நந்தினி

20/10/2021 08:07 PM

கோலாலம்பூர், 20 அக்டோபர் (பெர்னாமா) -- இம்மாதம் 30-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகாவின் மகளிர் பிரிவுக்கான தேர்தலில் தமது பதவியை தற்காத்து போட்டியிடவிருப்பதாக அதன் தலைவி உஷா நந்தினி அறிவித்திருக்கிறார்.

50-க்கும் அதிகமான மகளிர் கிளைத் தலைவிகளின் ஆதரவை பெற்றிருப்பதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் வேட்புமனு தாக்கலின் போது, தமது வேட்புமனு பாரத்தை சமர்பிக்கவிருப்பதாக அவர் கூறினார்.

வரும் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி தொடங்கி நண்பகல் 1.00 மணி வரையில் மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் மகளிர் பிரிவுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது.

2003-ஆம் ஆண்டு தொடங்கி 2013ஆம் ஆண்டு வரையில் மஇகாவின் புத்ரி பிரிவுத் தலைவியாக இருந்த உஷா நந்தினி 2018ஆம் ஆண்டு மஇகாவின் மகளிர் பிரிவுத் தலைவியாக போட்டியின்றி வெற்றிப் பெற்றார்.

மகளிர் பிரிவு உட்பட கட்சியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து தமது ஆக்கப்பூர்வமான சேவையை வழங்கவிருப்பதாக இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

மஇகாவின் முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவி டத்தோ எம்.மோகனாவும் இப்பதவிக்கு போட்டியிடப் போவதாக வெளியாகும் தகவல் குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.

''தேர்தல் ஒரு ஜனநாயகம். தகுதியானர்கள் தாராளமாக போட்டியிடலாம். ஆனால், அந்தத் தேர்தல் ஓர் ஆரோக்கியமான தேர்தலாக இருப்பது அவசியம்,'' என்றார் அவர்.

2018-ஆம் ஆண்டு தொடங்கி கட்சியை வலுப்படுத்தி மக்களுக்கு சேவை செய்யவும் அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் மஇகா பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

அதில் மஇகாவின் மகளிர் பிரிவு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது மறுப்பதற்கில்லை என்று உஷா நந்தினி தெரிவித்தார்.

சுமார் 1000 மகளிர்களுக்கு தலைமைத்துவம், தொழில்நுட்பம் உட்பட பல பயிற்சிகளை மஇகா மகளிர் பிரிவு வழங்கியிருக்கிறது.

அதில் 400 முதல் 500 பேர் வர்த்தகத் துறையில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

'',இதுவரை சேகரித்த தகவல்கள் அடிப்படையில் நிறைய மகளிர் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலை, தொடர வேண்டும். இது தொடர்பில், மகளிர் பிரிவு தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்,'' என்றார் அவர்.

மஇகாவில் இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்ரி பிரிவுக்கான தேர்தல் எதிர்வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அவற்றிற்கான வேட்புமனு தாக்கல் நடைபெறள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)