விளையாட்டு

செல்சியை விற்பதற்கான நடவடிக்கைக்கு பிரிட்டன் அரசாங்கம் அனுமதி

26/05/2022 09:16 PM

லண்டன் 26 மே, (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண காற்பந்து கிளப்பான செல்சியை விற்பதற்கான நடவடிக்கைக்கு பிரிட்டன் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

சுமார் 425 கோடி பவுன்ட் தொகையில், அமெரிக்காவைச் சேர்ந்த செல்வந்தரும் பிரபல வர்த்தகருமான தோட் போலே, செல்சி கிளப்பை விலைக்கு வாங்கி இருக்கின்றார்.

இந்த விற்பனை நடவடிக்கையில் அரசாங்கம் தலையிட்டு இருப்பதால், அதன் நடவடிக்கைகள் முழுமை பெறுவதற்கு காலத் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விற்பனையின் மூலம், முன்னாள் உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச்சுக்கு எந்தவொரு லாபமும் கிடைக்காது என்பதை உறுதி செய்த பின்னரே, பிரிட்டம் அரசாங்கம், இந்த முயற்சிக்கு அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் பணம் யுக்ரேனிய மக்களின் மனிதநேய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காற்பந்து வரலாற்றில், ஒரு கிளப்பை விற்கும் நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடுவது இதுவே முதன் முறையாகும்.

இதனை அடுத்து செல்சி தனது புதிய பருவத்திற்கு வேகமாக தயாராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் உரிமையாளர் அப்ரமோவிச்சின் அனைத்து சொத்துகளும் பிரிட்டனில் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எவ்வித லாபமும் இதில் கிடைக்கக்கூடாது என்பதிலும் அது குறியாக இருக்கின்றது.

2003--ஆம் ஆண்டில் 14 கோடி பவுன்ட் தொகைக்கு , அப்ரமோவிச் செல்சி கிளப்பை விலைக்கு வாங்கிய பின்னர், இங்கிலாந்து காற்பந்து உலகில் 19 ஆண்டுகள் செல்சியின் பொற்காலம் என்று கூறப்படுகிறது.

-- பெர்னாமா