பொது

எண்ணெய் விலை குறையும் போது அதனைப் பதுக்க வேண்டாம்

07/08/2022 09:39 PM

செர்டாங், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஐந்து கிலோ கிராம் பாட்டில் சமையல் எண்ணெய்யின் உச்ச வரம்பு விலை நாளை தொடங்கி அமல்படுத்தப்படவுள்ள நிலையில், பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் நேரடியாக ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அதனைப் பதுக்க வேண்டாம் என்று நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏனெனில் இதுபோன்ற செயல்கள் இறுதியில் பயனீட்டாளர்களுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, வர்த்தகர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று பணவீக்கத்தைக் களையும் சிறப்புக் குழுவின் தலைவர் டான் ஶ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

"எண்ணெய் விலை குறையும் போது அதனைப் பதுக்க வேண்டாம். அது பிரச்சனை கலைய வழிவகுக்காது," என்று இன்று செர்டாங்கில் மலேசிய விவசாயக் கண்காட்சி பூங்காவில் 2022-ஆம் ஆண்டுக்கான மலேசிய விவசாயம், தோட்டக் கலை மற்றும் வேளாண்மை சுற்றுலா கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் அவர் கூறினார்.

மலிவு சமையல் எண்ணெய்யை விற்கும் போது பொறுப்பற்ற தரப்பினர் அதனை ஒதுக்கி  வைப்பதால், சந்தையில் அதற்கான பற்றாக்குறை ஏற்படலாம் என்பது குறித்து  அனுவார் மூசா கருத்து தெரிவித்தார்.

நாளை திங்கட்கிழமை தொடங்கி, 5 கிலோ கிராம் பாட்டில் சமையல் எண்ணெய் 34 ரிங்கிட் 70 சென்னுக்கு விற்கப்படவிருக்கிறது.

தற்போது 5 கிலோ கிராம் பாட்டில் சமையல் எண்ணெய் 39 ரிங்கிட்டில் இருந்து 42 ரிங்கிட் வரை விற்கப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)