உலகம்

இலங்கை பொருளாதார நெருக்கடி; முல்லைத்தீவில் வசிக்கும் தமிழர்களையும் விட்டு வைக்கவில்லை

16/09/2022 08:06 PM

முல்லைத்தீவு, 16 செப்டம்பர் (பெர்னாமா) -- இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களையும் விட்டு வைக்கவில்லை.

உள்நாட்டு யுத்தம் முடிந்து 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில் முல்லைத்தீவில் வசிக்கும் தமிழ் மக்கள் மீண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

முல்லைத்தீவில் வசிக்கும் மக்களில் பலர் அடிப்படைத் தேவைக்கான பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

வேலையில்லா திண்டாட்டமும் பலரை வருமையில் தள்ளியுள்ளது.

ஆதலால், வயிற்றுப் பிழைப்பிற்காக சிங்காரம் சூசையமுத்து என்பவர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.

2009-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி, யுத்தத்தில் காயமடைந்ததால் அவர் தனது இரு கால்களை இழந்தார்.

அதன் பின்னர், உடலில் ஏற்பட்ட ஊனத்தினால் சூசையமுத்து தன் வேலையையும் இழந்தார்.

''கஷ்டம் கூட இருக்கு. கூலி வேலைக்குச் செல்ல முடியவில்லை. மற்றவர்கள் செல்கிறார்கள். என்னால் செய்ய இயலாது தானே. இருக்கிற நிலத்தில் சொந்தமாக முயற்சி செய்து தொழில் (விவசாயம்) செய்கிறேன்,'' என்று அவர் கூறுகிறார்.

தரிசு நிலத்தில் கடலை பயிர் செய்து தனது வருமானத்தை ஈட்டி வருகிறார் 44 வயதான சூசையமுத்து.

உள்நாட்டு யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு இலங்கையின் இரண்டாவது வறுமையான மாவட்டமாக உள்ளது.

அங்கே வசிக்கும் 58 விழுக்காட்டு குடும்பங்கள் வறுமையில் வாடுவதாக அங்கே வசிப்பவர்களில் சிலர் கூறினர்.

''வசதியா இருக்கின்றவர்களுக்கு தான் முன்னுரிமை. எங்களைப் போன்ற ஏழைகள் கவனிக்கப்படுவதில்லை,'' என்று கூறுகிறார் கலைச்செல்வி செந்தீபன் என்பவர்.

அதே வேளையில், குழந்தைகளும் பட்டினியால் வாடுவதாக சரோஜா செல்வகுமார் என்பவர் தெரிவித்தார்.

''இங்கே இருப்பதற்கு இடம் இல்லை. சாப்பாடு இல்லை. ஒரு வேளைதான் சாப்பிடுகிறோம். நான் சாப்பிட வில்லை என்றால் என் குழந்தைக்கும் பால் கொடுக்க இயலாது,'' சரோஜா வருத்தம் தெரிவித்தார்.

இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள முல்லைத்தீவில் வசித்து வரும் தமிழர்களில் பலர் போரின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற 26 ஆண்டுக் கால உள்நாட்டு யுத்தத்தில், சுமார் ஒரு லட்சத்து 69,796 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)