பொது

2023ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டம் வாழ்க்கை செலவினத்தை குறைக்க வேண்டும் - மக்கள் எதிர்பார்ப்பு

05/10/2022 08:14 PM

கோலாலம்பூர்,  அக்டோபர் 5 (பெர்னாமா) -- பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் மக்களின் வாழ்க்கை செலுவினமும் முந்தைய காலங்களை காட்டிலும் கூடுதலாகியுள்ளது.

ஆகவே, நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2023ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில், வாழ்க்கை செலவினத்தை குறைப்பதற்கான அம்சங்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் ஊக்குவிப்பு தொகைகள் கூடுதலாக இருந்தால் விலைவாசி பிரச்னையை சமாளிக்க முடியும் என்று பொது மக்கள் சிலர் கருதுகின்றனர்.

மேலும், அதிகரித்திருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் முறையான திட்டமிடல்களை கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

''பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. பொருட்களை வாங்குவதற்கு சிரமத்தை எதிர்நோக்குகின்றோம். விலைகளை குறைத்தால் சிறப்பாக இருக்கும். அதே வேளையில், கூடுதலாக ஒதுக்கீடு செய்தால் உதவியாக இருக்கும்,'' என்றுக் லோகா, செல்வராணி ஆகியோர் கூறினர்.

குறைந்தபட்ச ஊதிய விகிதம் மாதம் ஆயிரத்து 500 ரிங்கிட் ஆக அதிகரித்திருந்தாலும், வங்கி கடன்களை பெறுவதற்கு இது போதுமானதாக இல்லை என்றும் வங்கி கடன் வழங்கும் விவகாரம் குறித்து இந்த வரவு செலவு திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

''கூடுதலாக இரண்டாயிரம் ரிங்கிட் வழங்கினால் சிறப்பாக இருக்கும். வங்கிக் கடன் வழங்குவதற்கு கூடுதலாக ஊதியமே தேவைப்படுகின்றது,'' என்றார் சரளா.  

அதோடு, இந்திய சமுதாயத்தில் முக்கிய அம்சங்களாக விளங்கும் தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் சார்ந்த ஒதுக்கீடுகள் கூடுதலாக இருக்க வேண்டும் என்று சிலர் கேட்டுக் கொண்டனர்.

''தமிழ்ப்பள்ளிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கினால் சிறப்பாக இருக்கும். வர்த்தகம் செய்யும் இந்தியர்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்வது தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு அவசியமானது,'' என்று லோகநாதன், பார்த்திவன் ஆகியோர் கூறினர்.

இச்சூழலில், மக்களின் தேவைகள் எதை சார்ந்து இருக்கின்றது என்பதை அறிந்து, அது தொடர்பில் ஆய்வுகள் செய்து வரவு செலுவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகள் செய்வதே சிறந்தது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)