சிறப்புச் செய்தி

தீபாவளிக்குப் பின்னர் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ள உணவை உட்கொள்வது சிறந்தது

25/10/2022 07:58 PM

கோலாலம்பூர், 25 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளி பண்டிகையின்போது உணவு வகைகளை ருசித்து உண்ணும்போது, அது ஆரோக்கியமானதா என்பது குறித்து சிந்திப்பவர்கள் மிகவும் குறைவு.

எனினும், சுகாதாரமான வாழ்க்கை முறையைத் தொடருவதற்கு, கொண்டாட்டத்திற்குப் பின்னர், உணவின் அளவை குறைத்துக் கொள்வதோடு, ஆரோக்கியமான உணவுமுறையையும் பின்பற்ற வேண்டும் என்கிறார் உணவியல் நிபுணர் திருகணேஷ் சன்வசிவம்.

தீபாவளி காலக்கட்டத்தில் உட்கொண்ட ஆரோக்கியமற்ற உணவுக்கு பதிலாக அப்பண்டிகைக்குப் பின்னர், ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ள உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

பண்டிகை காலத்தில் கட்டுப்பாடுகளுடன் உணவை உட்கொள்ள வேண்டும் என்பது கடினமான ஒன்றுதான்.

ஆண்டுக்கு ஒரு முறைதானே என்ற எண்ணத்தை மனதில் நிறுத்தி அளவில்லாமல் உட்கொள்ளும் உணவே, வரும் காலத்தில் பின்விளைவுகளைக் கொண்டு வருகின்றது.

எனவே, கொண்டாடத்தின் போது உணவு முறையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதற்கு பின்னர் உண்ணும் உணவில் கட்டுப்பாடுகள் இருப்பதை மக்கள் உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்று திருகணேஷ் சன்வசிவம் விளக்கினார்.

''இந்தப் பண்டிகை காலத்தில் உணவுகளில் அதிகமான கலோரிகள் இருக்கும். ஆனால், குறைவான ஊட்டத்சத்தே இருக்கும். தீபாவளி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படுகின்றது. அதனால், இந்த உணவு வகைகளை சாப்பிடுவது தவறு அல்ல. ஆனால், பின்வரும் நாட்களில் கலோரி அதிகமாக உள்ள உணவுகளை குறைத்து ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவை எடுக்க வேண்டும்,'' என்றார் அவர்.

பிரியாணி, நெய் சோறு, குழம்பு வகைகள், அதிகமாக எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவு வகைகள், பொரியல் ஆகியவற்றை தொடர்ச்சியாக உண்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு பதிலாக, வெள்ளை சோறு, இட்லி, தோசை ஆகியவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்வது சிறப்பு என்று திருகணேஷ் கூறினார்.

''பண்டிகை காலங்களில் சமசீரான உணவை கடைப்பிடிப்பது கடினம். பழங்கள், காய்கறிகளை குறைவாகவே உட்கொண்டிருப்போம். அதனால், தினசரி தேவையை பூர்த்தி செய்ய முடியாது. ஏற்கனவே உள்ள ஊட்டச்சத்துகளும் குறைந்திருக்கும். அதனால், இந்த ஊட்டச்சத்துகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார் திருகணேஷ்.

சில சத்துக்களை உடலில் சேர்த்து வைத்துக் கொள்ள முடியாது என்பதால் அவ்வப்போது உண்ணும் உணவு சத்துக்கள் நிறைந்திருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, காய்கறிகள் மற்றும் பழ வகைகள் உணவில் சேர்க்கப்பட வேண்டும் என்றுக் கூறிய திருகணேஷ், அதன் அளவு முறையை இவ்வாறு விளக்குகின்றார்.

''வைட்டமின் சி, வைட்டமின் பி 6, வைட்டமின் பி 12, கெல்சியம், சிங்க் ஆகியவற்றை உடலில் சேர்த்து வைக்க முடியாது. அதனால், தினசரி உணவில் ஊட்டச்சத்துகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். தினசரி 12 கரண்டி காய்கறிகள் உட்கொள்ள வேண்டும். பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். பழங்களை அரைத்து பானமாகவும் குடிக்கலாம். அதிலுள்ள நார் சத்து உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது,'' என்றார் அவர்.

இதனிடையே, இந்தத் தீபாவளி காலக்கட்டத்தில் குளிர்பானங்கள் அல்லது அதிக சீனி சேர்க்கப்பட்ட பானங்களை மக்கள் அருந்தியிருக்கலாம்.

எனவே, இதற்கு பின்னர், ஒரு நாளைக்கு எட்டு குவளை தண்ணீர் குடிப்பதை உறுதி செய்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதோடு, பண்டிகைக் குதூகலத்துடன் மட்டும் இருந்துவிடாமல், சத்தான உணவை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துமாறு திருகணேஷ் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)