விளையாட்டு

எதிர்ப்பார்ப்புகளோடு தொடங்குகின்றது காலிறுதி ஆட்டங்கள்

09/12/2022 04:12 PM

டோஹா, 09 டிசம்பர் (பெர்னாமா) -- 2022 கட்டார் உலகக் கிண்ண காற்பந்து போட்டியில், இன்று இரு காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.  

முதல் ஆட்டத்தில் பிரேசில் குரோஷியாவைச் சந்திக்கின்ற வேளையில், பின்னிரவில் அர்ஜெண்டினா நெதர்லாந்துடன் களம் காணவிருக்கிறது. 

பலம் பொருந்திய நாடுகள் இதில், மோதுகின்ற நிலையில், ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி காலிறுதியில் பங்கேற்கும் நாடுகளின் பலம் பலவீனங்கள் குறித்த கண்ணோட்டத்தை காண்போம். 

2002-ஆம் ஆண்டில் ஐந்தாவது உலகக் கிண்ணத்தை வென்றிருக்கும் பிரேசில் தனது ஆறாவது சாதனைக்காக கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகிறது. 

அந்த வேட்கையோடு, கடந்த முறை இறுதி ஆட்டம்வரை முன்னேறிய குரோஷியாவை தோற்கடிக்கும் வேண்டும் என்றும் அது இலக்கு கொண்டுள்ளது.

குழு நிலையில், செர்பியாவை 2-0, சுவிட்சர்லாந்தை 1-0 என்ற கணக்கிலும் வீழ்த்திய பிரேசில் கேமரூனிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. 

காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் நேய்மார், தாக்குதலில் பாயும் வினிசியஸ், மத்திய திடலில் ரிக்கார்லிசன் என்று வலிமையான அணியோடு பிரேசில் களமிறங்க தயாராக உள்ளது. 

அதேபோல் குரோஷியாவை பொறுத்தவரை அதன் கேப்டன் லூகா மோட்ரிச்சுக்கு இது கடைசி உலகக் கிண்ணப் போட்டியாகும்.

37 வயதானாலும் அவரின் ஓட்டமும் தாக்குதலும் குரோஷியாவை காலிறுதி வரை கொண்டு வந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.  

ஆனால், ஜப்பானிடம் பெனால்டி வாய்ப்பில் தப்பித்து குரோஷியா வெற்றி பெற்றதால், பிரேசிலுக்கு எதிரான ஆட்டம் அதற்கு சவாலாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

மற்றோரு ஆட்டத்தில், நெதர்லாந்தை  எதிர்த்து வலிமையான அர்ஜெண்டினா களம் காணவிருக்கிறது.

சுமாராக விளையாடிய அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு வந்துள்ள நெதர்லாந்து தனது தாக்குதல் ஆட்டத்தையே நம்பியுள்ளது.  

அதேபோல், தற்காப்பு ஆட்டத்திலும் அதனை வெல்வது கடினம் என்பதால், அர்ஜெண்டினா ஆட்டக்காரர்களால், எளிதாக கோல் அடிக்க முடியுமா என்பதும் கேள்விகுறிதான். 

இதனிடையே, அர்ஜெண்டினாவின் தாக்குதல் ஆட்டம் அனைவருக்கும் தெரிந்தது என்றாலும், நெதர்லாந்ததுக்கு எதிராக அது ஈடுகொடுக்க வேண்டும் என்றும் அதன் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். 

காரணம், ஒவ்வொரு ஆட்டத்திலும் முதல் பாதியிலேயே முதல் கோலை அடித்து எதிரணிக்கு கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தை அர்ஜெண்டினா உருவாக்கி வருந்திருக்கிறது.

அதேவேளையில், அதன் கேட்படன் லியோனல் மெஸ்சிக்கு இது கடைசி உலகக் கிண்ணம் என்பதால், ஏதேனும் ஒரு திருப்புமுனையை அவர் ஏற்படுத்துவார் என்பது மிகப் பெரிய நம்பிக்கையாகி உள்ளது. 

 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)