பொது

நாட்டின் விசாரணை, அமலாக்கம், நீதித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது - பிரதமர்

02/02/2023 05:41 PM

புத்ராஜெயா, 02 பிப்ரவரி (பெர்னாமா) -- நாட்டின் விசாரணை, அமலாக்கம் மற்றும் நீதித்துறை ஆகியவை சுதந்திரமாக செயல்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஒருமைபாட்டு அரசாங்கம் எந்தவொரு விசாரணையிலும் தலையிடவில்லை என்றும் விசாரணையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுத்த முந்தைய அரசாங்கத்தின் அணுகுமுறையை பின்பற்றவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

பெர்சத்து கட்சியின் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து அரசாங்கத்தை குறை கூறும் எதிர்கட்சி தலைவர்களின் போக்கு பொறுப்பற்றது என்றும் பிரதமர் சாடியிருக்கிறார்.

''முதலாவது, பெர்சத்து கட்சியின் பண பயன்பாடு குறித்து பி.டி.ஆர்.எம். மற்றும் எஸ்.பி.ஆர்.எம். ஆகியவற்றில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது, நிதி அமைச்சில் நான் என்னுடைய பணிகளைச் செய்கிறேன். குத்தகை முறை இல்லாமல், அதிக செலவுகள் கொண்ட திட்டங்களை நான் கண்காணித்து வருகின்றேன்,'' என்றார் அவர்.

30 கோடி ரிங்கிட் வைத்திருந்த அக்கட்சி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அன்வார் தெளிவுபடுத்தினார்.

இதனிடையே கெஅடிலான் மற்றும் ஜ.செ.க.வின் கணக்குகள் பொதுவில் வெளியிடப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வாறு செய்வதற்கு தமக்கு எந்த தடையும் இல்லை என்று கெஅடிலான் கட்சியின் தலைவருமான அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)