பொது

தைப்பூசத்திற்கு அனல் பறக்கும் தேங்காய் விற்பனை

03/02/2023 08:26 PM

பாசிர் பென்ம்பாங், 03 பிப்ரவரி (பெர்னாமா) -- தேங்காயின் பயன்பாடு இல்லாமல் இந்தியர்களின் சிறப்பு நாட்கள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்கள் முழுமையாகாது. 

எச்சில் படாத பண்டங்களுள் தேங்காயும் ஒன்றாக இருப்பதை முன்னிறுத்தியே இறைவனுக்கு உகந்ததாக அதனைப் படைக்கும் மரபினை நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர்.

அதன் காரணமாகவும் தைப்பூசத்திற்கு முருகப் பெருமானின் வெள்ளி இரத ஊர்வலத்தின் போது, பக்தர்கள் பரவசம் பொங்க தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடனைச் செலுத்துவதை காணலாம்.

அந்த மரபு மாறாமல் இருக்கும் பெரிய நகரங்களின் ஆலய தேவைகளுக்கு, தேங்காய்களை விநியோகித்து வருவதாக கூறுகின்றார்  சிலாங்கூர், பாசிர் பென்ம்பாங்கில் வசிக்கும் 51 வயதுடைய நாராயணசாமி பொன்னையா. 

1980-ஆம் ஆண்டுகளில் தமது தந்தையார் தொடங்கிய இத்தொழிலை 1992ஆம் ஆண்டிற்குப் பிறகு தாம் நேரடியாக ஈடுபட்டதாக கூறிய நாராயணசாமி பொன்னையா, இதிலுள்ள பல நுணுங்கங்களைப் படிப்படியாக கற்றுத் தேர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

வெறும் 70 மரங்களில் ஆரம்பித்த தோப்பில் தற்போது 1,000-க்கும் மேற்பட்ட மரங்களாக அதிகரித்துள்ளன.

தொடக்கத்தில் வெறும் நாட்டு தென்னை மரங்கள் மட்டுமே தோப்புகளில் நடப்பட்ட வேளையில், தற்போது MAWAR, DOVE  வகை தென்னங் கன்றுகளும் அதிகளவில் நடப்பட்டு வருகின்றன.

அதிலும் அண்மைய காலமாக MATAK மற்றும் PANDAN வகை தேங்காய்களும் கடைகளில் மட்டுமின்றி ஆலயங்களிலும் பெருமளவில் விநியோகிக்கப்பட்டு வருவதாக நாராயணசாமி கூறினார்.

''தென்னை மரங்களை நட்டு வைத்தால் அடுத்த மூன்றாண்டுகளில் அது வளர்ந்து பறிக்கும் அளவிற்குத் தன்மைப் பெறும். மூன்று வருடங்களைத் தொடர்ந்து அதை முறையாகப் பாரமரித்தால் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு அம்மரம் தரமான தேங்காய்களைக் கொடுக்கும். ஆனால் சில சமயம் மிக உயரமாக வளரும் என்பதால் ஐம்பது ஆண்டுகளில் அம்மரம் வெட்டப்பட்டு புதுக் கன்று நடப்படும்,'' என்று அவர் கூறினார்.

தொடங்கப்பட்ட காலம் முதல் இதுவரை கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பத்துமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆலயங்களுக்கும் கடைகளுக்கும் மட்டுமே தேங்காய்களை விநியோக்கிப்பதாக நாராயணசாமி தெரிவித்தார்.

அதிலும், தேங்காய்கள் A,B,C GRED வகையில் தரம் பிரிக்கப்படுவதாகக் கூறிய அவர்,  A GRED தேங்காய் கடைகளுக்கும் B மற்றும் C GRED தேங்காய்கள் ஆலயத்திற்கும் விநியோகிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

''ஏ கிரேட் தேங்காய்கள் மொத்தமாக இருப்பதோடு அதன் கொப்பரைகளும் தடிமனாக இருக்கும். அதனால் பெரும்பாலான கடைகளுக்கும் தேங்காய்ப்பூ அரைப்பதற்கும் அவ்வகை தேங்காய்கள் பயன்படுத்தப்படும். ஆனால் பி மற்றும் சி கிரேட் தேங்காய்கள் சிறிய அளவில் இருக்கும் பட்சத்தில் அது ஆலய அர்ச்சனைகளுக்குப் பயன்படுத்தலாம்,'' என்றார் அவர்.

ஈராண்டுக்குப் பிறகு இம்முறை எவ்வித கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமான முறையில் தைப்பூசம் கொண்டாடப்படுவதால் பத்துமலை முருகன் ஆலயத்திற்கு மட்டும் இதுவரையில் 36,000 ஆயிரம் தேங்காய்களை அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், இன்னும் சில ஆயிரம் தேங்காய்கள் அனுப்பும் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருவதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.

தேங்காயின் மேலுள்ள ஓடு கடினமாக இருந்தாலும், அதனுள் இருக்கும் கொப்பரை வெள்ளை நிறமாக இருப்பதைப் போன்று பக்தர்களின் எண்ணம் தூய்மையாகவும் ஈர மனதோடும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே ஆலயங்களில் தேங்காய் உடைக்கப்படுவதாக அவர் விளக்கினார்.

ஆயினும், பெண்கள் தேங்காய் உடைக்கக் கூடாது என்று கூறுவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதையும் நாராயணசாமி தின்னமாக கூறினார்.

''வீட்டில் தேங்காய் உடைத்து சமைப்பதற்கு பெண்களுக்கு உரிமை இருக்கையில். எதற்காக ஆலயங்களில் மட்டும் அவர்களுக்கு தேங்காய் உடைக்க அனுமதி இல்லை என்பது எனக்குப் புரியவில்லை. அதில் எனக்கு உடன்பாடும் கிடையாது,'' என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, உடைக்கப்பட்ட தேங்காய்களை தமது தரப்பு மீண்டும் சேகரித்து தேங்காய் எண்ணெய் தயாரிப்பதாகவும் நாராயணசாமி கூறினார்.

அதேவேளையில், போதுமான வேலையாட்கள் இல்லாத காரணத்தால் 60,000-க்கும் மேற்பட்ட உடைத்த தேங்காய்களை கொட்டாங்கச்சி தனியாகவும் கொப்பரைகள் தனியாகவும் பிரிக்க முடியாமல் அவை அழுகி வருவதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.

வாழை, வெற்றிலைப் போன்று தென்னையின் மவுசும் எப்போதும் குறையாது என்பதால் இந்த அழிவில்லா வியாபாரத்தில்  இந்தியர்கள் குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் கால்பதிக்க வேண்டும் என்ற தமது ஆவலையும் அவர் பெர்னாமா செய்திகளின் சிறப்பு நேர்காணலின்போது வெளிப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)