உலகம்

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் விவசாயிகளின் போராட்டம்

21/02/2024 07:38 PM

புது டெல்லி, 21 பிப்ரவரி (பெர்னாமா) -- இந்தியாவில், விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு நான்கு முறை நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து இன்று போராட்டம் தொடரப்பட்டுள்ளது.

டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று தொடங்கும் விதமாக ஹரியானா, பஞ்சாப் எல்லையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் போலீசாரின் தடுப்புகளை அகற்ற விவசாயிகள் விவசாய இயந்திரங்களுடன் புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகளை தடுக்கும் விதமாகவும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும் ஹரியானா மாநில எல்லை பகுதியில் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக அரசாங்கத்தின் பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள் புது டெல்லியை நோக்கி தங்களின் பேரணியைத் தொடரவிருப்பதாக தெரிவித்திருந்தனர்.

விவசாய பொருட்களின் குறைந்தபட்ச விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை கடந்த 13ஆம் தேதி தொடங்கினர்.

இதன் தொடர்பில், மத்திய அரசாங்கம் விவசாய சங்கங்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசாங்கம் முன்வைத்த பரிந்துரைகள் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இல்லாததால் இன்று போராட்டம் மீண்டும் தொடங்கியது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]