அரசியல்

பெர்சத்துவுடன் ஒத்துழைப்பதற்கு தயாரில்லை - சஹிட் ஹமிடி

22/10/2021 02:22 PM

மலாக்கா, 22 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த அம்னோ பொதுப் பேரவையிலேயே பெர்சத்து கட்சியுடனான ஒத்துழைப்பு குறித்து முடிவு செய்யப்பட்டுவிட்டதால் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படும் பிரச்சனை எழாது என்று அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''பெர்சத்து குறித்து நாங்கள் முடிவெடுத்துவிட்டோம். நாங்கள் அவர்களுடன் எந்தவித ஒத்துழைப்பையும் இதுவரை மேற்கொண்டதில்லை. தாமதம் ஏற்படவில்லை; கடந்த அம்னோ பொதுப் பேரவையிலேயே இது குறித்து முடிவு செய்துவிட்டோம். அதுதான் எங்களின் இறுதியான முடிவு. நாங்கள் பெர்சத்துவுடன் ஒத்துழைக்க மாட்டோம்,'' என்றார் அவர். 

நேற்றிரவு அம்னோ ஹங் துவா ஜெயா தொகுதியுடன் நடத்திய சந்திப்பிற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இத்தகவல்களை வழங்கினார்.

மலாக்கா மாநில தேர்தலில் போட்டியைத் தவிர்ப்பதற்காக, ஒத்துழைப்பை வழங்கலாமா இல்லையா என்ற முடிவெடுப்பதற்கு அம்னோவிற்காக தமது கட்சி அதிக நேரம் காத்திருக்க முடியாது என்று பெர்சத்து தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் முன்னதாக கூறி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]