உலகம்

சில வெளிநாட்டு செய்திகளின் தொகுப்பு - 23 அக்டோபர் 2021

23/10/2021 04:35 PM

பாக்கிஸ்தான், அக்டோபர் 23 (பெர்னாமா) -- Tehrik-e-Labaik அமைப்பு மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை அகற்றக் கோரியும் அதன் தலைவர்களை விடுதலை செய்யக் கோரியும் பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மூவர் பலியாகியிருக்கின்றனர்.

ஆர்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தால் மூவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆர்பாட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

கின்ஷாசா, காங்கோ ஜனநாயக குடியரசு

அரசு நிறுவனம் ஒன்றில் ஊதியம் வழங்காததால் அதில் பணிபுரியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆர்பாட்டத்தைக் களைக்க கண்ணீர் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில் காயமடைந்தவர்களின் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

லண்டன், இங்கிலாந்து

கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்தாலும் இனி பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று பிரிட்டன் பிரதமர் போடிஸ் ஜோன்சன் கோடி காட்டியிருக்கிறார். மாறாகத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஏழு நாட்களில் பிரிட்டனில் பதிவு செய்யப்படும் கொவிட்-19 சம்பவங்கள் 17.9 விழுக்காடு அதிகரித்திருக்கிறது.

சீனா

சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறவிருப்பதால் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது தடுப்பூசிக்குப் பிறகு அதன் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் பயனுள்ளதாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியாததால் கூடுதல் தடுப்பூசி அவசியம் என்று சீனாவின் நிபுணர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். இதுவரை சீனாவில் 200 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

மாஸ்கோ, ரஷ்யா

ரஷ்யாவில் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும் மரண சம்பவங்களும் தீவிர சிக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]